சந்திரசேகரனின் சித்திர ஆசிரியர் சித்திரத்தை அழிப்பது போல எமது கடல் வளத்தை அழிக்கிறார்.!
அமைச்சர் சந்திரசேகரனின் சித்திர ஆசிரியர் சித்திரத்தை வரைந்து வரைந்து அழிப்பது போன்று கடல் வளத்தையும் அழிக்கிறார். இதனால் பாரம்பரிய சிறு தொழில் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். சந்திரசேகரன் அமைச்சரா? அல்லது சித்திர ஆசிரியர் அமைச்சரா? இதனை சந்திரசேகரன் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு மீனவ சங்கங்களின் கூட்டிணைவு மக்கள் போராட்ட இயக்கத்தின் பிரதிநிதி அன்னலிங்கம் அன்னரசா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அவர் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
சந்திரசேகரன் சும்மா இருக்க, பல அரச திணைக்களங்களை அந்த சித்திர ஆசிரியர் மிரட்டி தன்னிச்சைப்படி நடாத்தி வருகின்றார்.
உரிய ஆய்வுகள் இன்றி, ஒழுங்குபடுத்தலின்றி செயற்பட்டு வந்த கடல் அட்டை பண்ணையானது ஒன்றரை வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சந்திரசேகரனின் சித்திர வாத்தியாரின் வருகையின் பின்னர் முறையற்ற வகையில் அந்த கடல் அட்டை பண்ணை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
நக்டா நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளராக வந்திருக்கின்ற அனோஜன் என்பவரால், யாழ்ப்பாணத்தில் இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடல் அட்டை பண்ணைகளுக்கான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. நாறாவின் ஆய்வறிக்கை இல்லாமல் கடலட்டை பண்ணையை வழங்குவதற்கு இந்த அனோஜன் சிபாரிசு செய்கின்றார் இவருக்கு கடலைப் பற்றி என்ன தெரியும்?
இன்று கடல் அட்டையை வளர்ப்பதற்கு குஞ்சுகள் இல்லாத நிலை காணப்படுகிறது. அட்டை குஞ்சுகள் இருக்கின்றனவா இல்லையா என்ற விடயம் அனோஜனுக்கு தெரியாதா? வடக்கு மாகாணத்தில் 90% தோல்வியடைந்த அட்டை குஞ்சு உருவாக்கும் பண்ணைகள் தான் உள்ளன. அந்த குஞ்சுகளை கூட பண்ணையில் விட்டு வளர்க்க முடியாது. குஞ்சு இல்லாமல் பண்ணைகள் கொடுக்க முடியாது என்று உங்களுக்கு தெரியாதா எங்கிருந்து குஞ்சு வருகின்றது? இதுதான் நீங்கள் படித்து வந்த படிப்பு?
அனோஜன், சிறு மீனவர்களை கருவறுத்து, நாங்கள் சாப்பிடும் சோற்றிலும் சீனாவின் மண்ணள்ளி போடுவதில் குறியாக நிற்கின்றார். இன்றைக்கு கடற்றொழில் சார்ந்த திணைக்களங்களுக்கு நாங்கள் செல்கின்றபோது, நாறாவின் ஆய்வறிக்கை இல்லாமல் கடலட்டை பண்ணைக்கு ஆய்வறிக்கை வழங்குமாறு அனோஜன் கடிதம் அனுப்பியதாக கூறுகின்றனர். இலங்கையின் கடல் வளம் தொடர்பான ஆய்வுடன் தொடர்புடைய நாறாவின் அனுமதி இன்றி, அனோஜன் தனது ஆய்வின் மூலமாகவா அனுமதி வழங்குகிறார்?
அனோஜன் அவர்களே! படித்தால் மட்டும் போதாது கடலை அறிய வேண்டும், அதனை சுற்றியுள்ள சூழலை அறிய வேண்டும், கடலை நம்பியுள்ள பாரம்பரிய சிறு மீனவர்களின் நிலையை அறிய வேண்டும். நாங்கள் கடல் அட்டை பண்ணைகளுக்கு எதிரானவர்கள் அல்ல. உரிய ஆய்வுகளின் பின்னர் அவற்றை வழங்க வேண்டும் என்பதே எமது நோக்கம் என்றார்.


