ராஜ் சோமதேவாவின் அறிக்கையை முற்றாக நிராகரிக்கின்றோம்.!
செம்மணி புதைகுழி விவகாரம் குறித்து பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையினை முற்றாக நிராகரித்து சர்வதேச விசாரணையை தாங்கள் கோருவதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டியதாக சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் செம்மணி சித்தப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த வழக்கில் ஆஜராகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையினை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே அவரால் வெளியிடப்பட்ட முதலாவது மற்றும் இரண்டாவது அறிக்கைகளுக்கு முற்றிலும் எதிரானவை.
அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே நடைபெற்ற கிரிசாந்தி குமாரசுவாமியின் கொலை வழக்கின் குற்றவாளியான, சோமரத்ன ராஜபக்சவினால் அடையாளம் காட்டப்பட்ட கிணற்றில் இருந்து ஆடைகள் மீட்கப்பட்ட விடயத்தினையும் நாங்கள் சுட்டிக்காட்டி இருந்தோம்.
அத்துடன் தற்போது அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கும் சித்துப்பாத்தி இந்து மயானத்தை தாண்டியும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் மன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
ராஜ் சோமதேவா போன்றோரின் அறிக்கைகளைப் போன்று அரசை பாதுகாக்கின்ற வகையில் அறிக்கைகள் வருகின்றபடியால்தான் நாங்கள் உள்ளக விசாரணை வேண்டாம், சர்வதேச விசாரணை தான் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வினை வழங்கும் என்பதனை நாங்கள் ஆழமாக வலியுறுத்தியுள்ளோம்.
ராஜ் சோமதேவாவின் அறிக்கையை முற்றாக நாங்கள் நிராகரிப்பதுடன் சர்வதேச விசாரணையை ஏற்றுக் கொள்வதாக மன்றில் சுட்டுக் காட்டினோம் என்றார்.


