டயகம முதல் கண்டி வரை அரச பேருந்து சேவை முன்னெடுக்கப்படாமையினால் பயணிகள் அவதி
தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட டயகம நகரிலிருந்து அதிகாலை 5.45 மணிக்கு கண்டி நோக்கிப் பயணிக்கும் அரச பேருந்து சேவை கடந்த பல நாட்களாக இடம்பெறாத காரணத்தினால், அப்பகுதி மக்கள் பெரும் போக்குவரத்துச் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக அதிகாலை வேளையில் தங்களது அன்றாடத் தேவைகளுக்காகப் பயணிக்கும் பொதுமக்கள், உரிய நேரத்தில் பேருந்து சேவை கிடைக்காததால் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கண்டி வைத்தியசாலை, நாவலப்பிட்டி வைத்தியசாலை மற்றும் நுவரெலியா வைத்தியசாலை உள்ளிட்ட இடங்களுக்குச் சிகிச்சைக்காகச் செல்லும் நோயாளர்கள் இந்தப் பேருந்து சேவையை பெரிதும் நம்பியுள்ளனர். இந்நிலையில், பேருந்து சேவை இன்மையால் நோயாளர்கள் உரிய நேரத்தில் வைத்தியசாலைகளைச் சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, டயகம, அக்கரப்பத்தனை, மண்றாசி, ஹோல்புரூக், , மேராயா உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து அதிகாலை வேளையில் பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களும் மற்றும் அரச தனியார் நிறுவனங்கள் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். தொழிலுக்குச் செல்வோரும் இந்தப் பேருந்து சேவையை நம்பியுள்ள நிலையில், உரிய நேரத்தில் போக்குவரத்து வசதி கிடைக்காததால் அவர்களது அன்றாடப் பணிகளும் பாதிக்கப்படுகின்றன.
இன்றைய தினமும் அதிகாலை பல இடங்களில் பயணிகள் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்த போதிலும், உரிய நேரத்தில் பேருந்து சேவை கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, ஹட்டன் இலங்கை போக்குவரத்துச் சபை (CTB) டிப்போ நிர்வாகம் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, டயகமவிலிருந்து அதிகாலை 5.45 மணிக்கு கண்டி நோக்கிப் பயணிக்கும் அரச பேருந்து சேவையைத் தடையின்றி மீண்டும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மக்களின் அத்தியாவசியப் போக்குவரத்துத் தேவையைக் கருத்திற்கொண்டு, இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வை அதிகாரிகள் விரைந்து வழங்குவார்களா என்பதே டயகம மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேச மக்களின் எதிர்பார்ப்பாகும்.
சம்பந்தப்பட்ட போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இது குறித்து உடனடியாக ஹட்டன் அரச பேருந்து சேவைகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்துடன் ஹட்டன் அரச பேருந்து நிலையத்திற்கு புதிய பேருந்துகளையும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என நுவரெலியா மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


