மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு.!
உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு நுவரெலியா றோற்றி கழகத்தின் (Rotary Club of Nuwara Eliya) ஒழுங்குபடுத்தலில் உலக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு நடைபவனி இன்று (07) சனிக்கிழமை நுவரெலியா பிரதான தபால் நிலைய முன்றலில் இருந்து ஆரம்பமாகி நுவரெலியா மாநகர சபை மண்டபம் வரை சென்று நிறைவு பெற்றது.
இன்றைய காலகட்டத்தில் பலவிதமான நோய்களினால் எமது சமூகம் பாதிப்படைந்து வரும் சூழ்நிலையில் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் ஆனது பெரிதும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றமை கண்கூடாக நாம் அறிந்ததே மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சையை விரைவாக ஆரம்பத்திலேயே மேற்கொண்டால் எந்த அளவிற்கு சிறப்பான விளைவுகளைப் பெறமுடியும் என்பவை தொடர்பான பயன்மிகுந்த விழிப்புணர்வு நிகழ்வானது பாடசாலை மாணவர்களின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது.
இதன்போது மார்பகப் புற்றுநோய் தொடர்பான நாடகங்களும் கோசங்களும் பதாதைகளும் ஏந்தியவாறு விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது.
தொடர்ந்து மாணவர்களின் கற்றல் வசதிக்கு உதவும் வகையில் 300 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நுவரெலியா றோற்றி கழகத்தின் தற்போதைய தலைவர் சேகர் சனுஷ்கர் மற்றும் அதன் உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் குறித்து இரு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர்.
மலையகத்தில் உள்ள பின்தங்கிய தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் இக்கழகம் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








