ஈரானின் எஞ்சிய பகுதிகளையும் அழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் – ட்ரம்ப் எச்சரிக்கை!
ஈரான் மீதான போரை மேலும் விரிவுபடுத்துவது குறித்து விரைவில் தீர்மானிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்பட்டால் ஈரானின் எஞ்சிய பகுதிகளையும் அழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என அவர் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் தேசிய பாதுகாப்புக் குழுவினரைச் சந்தித்த பின்னர் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், ஈரானின் அணுசக்தித் திட்டம் மீண்டும் ஒருபோதும் செயல்பட முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த மோதலில் இதுவரை 18 அமெரிக்க இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பெற்ற வெற்றி, ஈரான் மீதான போரில் ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம் எனக் கருதப்படுகிறது.
புதிய காங்கிரஸ் ஜனவரி மாதம் பொறுப்பேற்கவுள்ள நிலையில், அதற்கு முன்னர் இராணுவத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்த ட்ரம்ப் முயற்சிக்கலாம் எனவும் சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரான் மீதான அடுத்தகட்ட நடவடிக்கையாக மேலதிகத் தாக்குதல்கள், பொருளாதார அழுத்தங்களைத் தொடருதல் அல்லது ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளுதல் ஆகிய தெரிவுகளை ட்ரம்ப் பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், ஈரான் மீது உடனடியாக மற்றுமொரு பாரிய தாக்குதலை நடத்தும் திட்டம் இல்லை என அவர் முன்னதாகக் கூறியிருந்ததுடன், தேவை ஏற்பட்டால் நடவடிக்கைக்குத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
போரைத் தொடர்வது தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டு வரும் மாறுபட்ட கருத்துகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.


