திருச்சி கிழக்கில் தவெக சார்பில் நடிகை திரிஷா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்!
தமிழகத்தில் எதிர்வரும் இடைத்தேர்தலை முன்னிட்டு, திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் நடிகை திரிஷா அல்லது கட்சியின் முக்கிய நிர்வாகியான ஜோன் ஆரோக்கியசாமி போட்டியிடக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதி என்பதால், திருச்சி கிழக்கு தொகுதி தவெகவின் முக்கிய அரசியல் தொகுதியாகக் கருதப்படுகிறது. இதனால், கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவரை அங்கு வேட்பாளராகக் களமிறக்க கட்சித் தலைமை திட்டமிடுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, டிசம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனைய நான்கு தொகுதிகளிலும் அண்மையில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் எனக் கூறப்படும் நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களுக்கும் முக்கிய நிர்வாகிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், குப. கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் குறித்த தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறுபுறம், திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் அன்பில் மகேஷ் அல்லது கே.என். நேரு ஆகியோர் தேர்தல் பணிகளில் முக்கியப் பங்காற்றக்கூடும் என அக்கட்சியினர் மத்தியில் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், மு.க. ஸ்டாலின் குறித்த தொகுதியில் போட்டியிடக்கூடும் என்ற ஊகங்களும் அரசியல் வட்டாரங்களில் நிலவுகின்றன.
இந்தநிலையில், தவெகவின் முக்கிய நிர்வாகியான ஜோன் ஆரோக்கியசாமி திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளராகக் களமிறக்கப்படலாம் என்பது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் முன்வைக்கப்படும் ஒரு கணிப்பாக உள்ளது.
அதேவேளை, அண்மையில் கோவையில் நடிகை திரிஷா பங்கேற்ற வீதி உலாவும் அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பும், அவர் தவெகவின் அரசியல் நடவடிக்கைகளில் முக்கியப் பங்காற்றக்கூடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இதனால், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்க்கு அடுத்த முக்கிய முகமாக யார் களமிறக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
எனினும், தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


