உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
2 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

விண்ணாங்கம்பிட்டி கிராமத்தை மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்க.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
72 பார்வைகள்

வவுனியா வடக்கு பிரதேசத்தில், பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள விண்ணாங்கம்பிட்டிக் கிராம மக்களின் பூர்வீகக் காணிகளை வனவளத் திணைக்களத்திடமிருந்து விடுவிப்பதுடன், குறித்த கிராமத்தை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளார்.

விண்ணாங்கம்பிட்டிக் கிராம மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, கடந்த 2026.10.11 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தமது கிராமத்தின் மீள்குடியேற்றம் தொடர்பில், 30 குடும்பங்களின் கையொப்பங்களுடன் கடந்த 2026.10.16ஆம் திகதியன்று விண்ணாங்கம்பிட்டிக் கிராம மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே குறித்த விண்ணாங்கம்பிட்டி கிராமத்தை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அந்தவகையில் “விண்ணாங்கம்பிட்டி கிராம மக்களின் பூர்வீகக் காணிகளை மீளப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பானது” எனத் தலைப்பிடப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பட்டிக்குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள விண்ணாங்கம்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களின் சார்பாளர்களால் கையொப்பமிடப்பட்டு, கடந்த 2026.10.16ஆம் திகதி எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைக் கடிதத்தின் படி தங்களின் கவனத்துக்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கைக் கடிதத்தில், விண்ணாங்கம்பிட்டி கிராமத்தில் அண்ணளவாக 100 ஏக்கர் பரப்பளவிலான காணிகளில் 30 குடும்பங்கள் பரம்பரையாக வாழ்ந்து வந்ததாகவும் 1984ஆம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண நிலைகள் காரணமாகத் தமது பூர்வீக காணிகளை விட்டு இடம்பெயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமது காணிகளை மீளத் துப்புரவு செய்து குடியேறுவதற்கு முயற்சித்த போது, குறித்த காணிகள் வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு, அந்நடவடிக்கைகள் தடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த காணிகளில் மக்கள் முன்னர் வாழ்ந்தமைக்கான அடையாளங்களாக பழைமையான கிணறுகள், பயன்தரு மரங்கள் உள்ளிட்டவை காணப்படுவதாகவும் காணி அனுமதிச் சீட்டுகள் உள்ளிட்ட ஆவணங்கள் சில குடும்பங்களிடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான காணி அனுமதிச் சீட்டொன்றின் படியும் தங்களின் கவனத்துக்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்களின் முன்னதாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கடந்த 2026.10.11 அன்று குறித்த பகுதிக்கு நேரில் சென்று மக்கள் முன்னர் வாழ்ந்ததாகக் குறிப்பிடப்படும் இடங்களை பார்வையிட்டிருந்தேன்.

எனவே, மிக நீண்டகாலமாக தமது பூர்வீக காணிகளை மீளப் பயன்படுத்த முடியாதுள்ள குறித்த மக்களின் நிலைமையைக் கருத்திற்கொண்டு, வனவளப் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட தொடர்புடைய திணைக்களங்களுடன் ஒருங்கிணைந்து, குறித்த காணிகளின் சட்டபூர்வ நிலையை ஆராய்ந்து மக்களின் காணிகளை அடையாளப்படுத்தி, அவற்றை மீள விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, விரைவில் அம்மக்களை அவர்களின் பூர்வீக வாழிடங்களில் மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன், மேற்படி நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பிலும் காணிகளை விடுவிப்பதில் ஏதேனும் சட்டரீதியான அல்லது நிர்வாக ரீதியான தடைகள் காணப்படுமாயின் அவை தொடர்பிலும் எமக்கு அறியத்தருமாறு தங்களைக் கேட்டுக்கொள்கின்றேன் எனக் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த கடிதமானது வவுனியா மாவட்ட செயலாளர், வவுனியா மாவட்ட வனவளப் பாதுகாப்புத் திணைக்களப் பொறுப்பதிகாரி, வவுனியா வடக்கு வட்டார வனஅலுவலர் ஆகியோருக்கும் பிரதியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு சட்ட ரீதியாக பதிலடி; அரசுக்கு உதய கம்மன்பில எச்சரிக்கை.!

தம் மீது சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்குச் சட்ட ரீதியாகப் பதிலடி கொடுக்கப் போவதாகப் பிவிதுரு ஹெல உரிமையின் தலைவர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார். எதுல்கோட்டையிலுள்ள கட்சியின்…

52 0 0
இலங்கை செய்திகள்

இலங்கைக்குள் ஒரு நெல்சன் மண்டேலா.!

நாமல் ராஜபக்ஷவைச் சிறையில் அடைத்துள்ளதன் மூலம், இலங்கைக்குள் ஒரு நெல்சன் மண்டேலாவை உருவாக்கும் வேலையையே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுத்து வருகின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…

83 0 0
இலங்கை செய்திகள்

படோவிட்ட அசங்கவின் போ*தைப்பொருள் நடவடிக்கைகளை வழிநடத்திய பெண் சிக்கினார்.!

போதைப்பொருள் கடத்தல்காரரான ‘படோவிட்ட அசங்க’ என்பவரின் போதைப்பொருள் நடவடிக்கைகளை நாட்டில் வழிநடத்தி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் முக்கிய பெண் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.…

85 0 0
இலங்கை செய்திகள்

லூயிஸ் மிக்கேற்பிள்ளை நினைவுக்கிண்ணத்தை கைப்பற்றிய வட்டுவாகல் உதயசூரியன்.!

முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன், அளம்பில் இளந்தென்றல் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட அமரர் லூயிஸ் மிக்கேற்பிள்ளை நினைவுக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி 01.11.2026 நேற்று அளம்பில் இளந்தென்றல்…

82 0 0