வாகனத்தைக் கடத்த முயன்றவர்களில் ஒருவர் கைது.!
வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றை, அதன் உரிமையாளரின் அனுமதியின்றி எடுத்துச் செல்ல முயன்ற இருவரில் ஒருவர் நானுஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா, நானுஓயா, பிளாக்பூல் பகுதியில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றைக் கடத்த முயன்ற 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர், நேற்று (30) இரவு நானுஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த தமது வேனைக் கடத்த முயல்வதாக உரிமையாளர் அளித்த தகவலின் பேரில், விரைந்து செயற்பட்ட நானுஓயா பொலிஸார், சுமார் 8 கிலோமீற்றர் தூரம் துரத்திச் சென்று வாகனத்துடன் சந்தேகநபரைப் பிடித்துள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை அடையாளம் காணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
நிதி நிறுவனமொன்றில் பெறப்பட்ட தவணைப் பணத்தைச் செலுத்துவதில் உரிமையாளர் தாமதம் காட்டியதால், அந்நிறுவனத்தின் (சீசர்) அறிவுறுத்தலின் பேரில் இவர்கள் வேனைக் கடத்த முயன்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், வாகன உரிமையாளருக்கும் பொலிஸாருக்கும் அறிவிக்காமல் நிதி நிறுவனத் தரகர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது எனப் பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாகப் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நாவலப்பிட்டியைச் சேர்ந்த சந்தேகநபரை இன்று (31) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நானுஓயா பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



