யாருக்காகவும் சட்டம் வளைக்கப்பட மாட்டாது.!
நாட்டில் நபர்களின் தகுதி அல்லது பதவி நிலைகளைப் பொருட்படுத்தாமல் சட்டம் அனைவருக்கும் சமமாகவும் நியாயமாகவும் செயற்படுத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த காலங்களில் சட்டம் சாதாரண பொதுமக்களுக்கு ஒரு விதமாகவும், பலம் வாய்ந்த அதிகாரிகளுக்கு வேறொரு விதமாகவும் செயற்படுத்தப்பட்டமையே நாட்டில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்ப்பதற்கான முதன்மையான காரணமாகும். இதனைக் கருத்தில்கொண்டே, எமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைத்து மக்களுக்கும் சட்டம் நியாயமான முறையில் செயற்படுவதை உறுதிப்படுத்த இந்த அரசு கடமைப்பட்டுள்ளது.
யாருடைய தராதரத்தையும் பார்க்காமல் சட்டத்தின் மேலாதிக்கம் நாட்டில் உறுதியாக நிலைநாட்டப்படும். அரசின் இந்த வெளிப்படைத்தன்மை தற்போது சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.” – என்றார்.
ஞானசார தேரரின் வழக்குக் குறித்து அவர் கூறுகையில்,
“இந்தப் பௌத்த பிக்குவுக்கு எதிரான வழக்கு முந்தைய அரசின் ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்டு, தற்போதைய நீதிமன்றத் தீர்ப்பின் மூலமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கான சட்டபூர்வமான வாய்ப்புகள் உரிய முறையில் காணப்பட்டன. அனைத்து நீதிமன்றச் செயற்பாடுகளும் பூர்த்தியடைந்த பின்னரே இந்த நிலைமை உருவாகியுள்ளது.
எனவே, சட்ட நடைமுறைகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும் பொதுவான முறையிலேயே செயற்படுத்தப்படும். குறிப்பிட்ட ஒரு நபரை இலக்குவைத்துச் சட்டத்தை வளைப்பதையோ அல்லது செயற்படுத்தாமல் விடுவதையோ மக்கள் எமது அரசிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.” – என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

