பாகிஸ்தானுடனான இருபதுக்கு 20 தொடரில் இலங்கைக்கு ஆறுதல் வெற்றி!
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, ராவல்பிண்டியில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி இருபதுக்கு 20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.
முன்னதாக, தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை (Bowling) தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்களை பெற்றது.
169 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, குசல் மெண்டிஸின் பொறுப்பான மற்றும் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 17.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 172 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
இலங்கை அணித் தரப்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிஸ் 48 பந்துகளில் 4 ஆறு ஒட்டங்கள், 9 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்களை குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
மேலும், கமிந்து மெண்டிஸ் 40 ஓட்டங்களையும் , சினேத் ஜெயவர்தன 38 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

