மட்டக்களப்பில் வெடித்த போராட்டம்.!
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராகவும், மக்களின் ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (09) மட்டக்களப்பு நகரில் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் இடம்பெற்ற இப்போராட்டமானது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 8 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக அடிப்படை அமைப்புகள், காணாமலாக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கூட்டு ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் பொறிக்கப்பட்ட பேரணிப் பதாகைகள் மற்றும் விழிப்புணர்வு அட்டைகளை ஏந்தியவாறு கண்டனக் கோஷங்களை எழுப்பினர். குறிப்பாக ‘பிஎஸ்ரிஏ’ சட்ட மூலம் வேண்டாம்…!” என்ற பிரதான பதாகையுடன் திரண்ட அவர்கள், “நாங்கள் கேட்டது மாற்றம்; ஆனால் கிடைத்தது ஏமாற்றம்!” என்ற வாசகம் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியிருந்தனர். மேலும், “அடக்குமுறைச் சட்டங்கள் எதுவும் வேண்டாம்!”, “சட்டம் பாதுகாக்க வேண்டும்; மாறாக பயமுறுத்தக் கூடாது!” மற்றும் “கேட்பது ஜனநாயகம்; தருவது அடக்குமுறை” போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ள இத்தகைய அடக்குமுறைச் சட்டமூலங்களை அரசு உடனடியாகக் கைவிட்டு, ஜனநாயகத்தையும் மக்களின் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.
இப்போராட்டத்தின் போது வெளியிடப்பட்ட அறிக்கையில், “பிஎஸ்ரிஏ”’ சட்டமூலமானது மக்களின் கூட்டம் கூடும் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், எழுத்துரிமை போன்ற அடிப்படை ஜனநாயக உரிமைகளை முடக்கும் நோக்கில் அமைந்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
பொலிஸ் அதிகாரி, இராணுவம், கடலோரக் காவல்படை ஆகியவற்றுக்கு அளவுக்கு அதிகமான அதிகாரங்களை வழங்குவதன் மூலம், பொதுமக்கள் கூட்டம் கூடுவதையும் தங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதையும் தடுக்கவும், கைது செய்யவும் வழிவகை செய்யப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
குறிப்பாக, இச்சட்டமூலத்தின் சரத்து 19 மற்றும் 20 இன் படி, பொலிஸாருக்கு இருப்பது போல இராணுவம் மற்றும் கடலோரக் காவல்படைக்கும் சந்தேக நபர்களைக் கைது செய்யும், வீடுகளுக்குச் சென்று சோதனையிடும், பிடியாணை இல்லாமல் கைது செய்யும் அதிகாரம் வழங்கப்படுகின்றது. மேலும், சரத்து 26 இன் படி கைது செய்யப்பட்டவரை 48 மணித்தியாலங்களில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த வழிசெய்வது அரசியலமைப்பின் 13.2 உறுப்புரை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு எதிரானதாகும் என்றும், சரத்து 27 இன் படி சந்தேகநபரை இரண்டு வருடங்களுக்குத் தடுத்து வைத்து விசாரிக்க அதிகாரம் அளிக்கப்படுவதாகவும், சரத்து 51 இன் படி பொலிஸ் அதிகாரி ஆபத்து நடைபெறும் என கருதினால் பொதுமக்கள் கூட்டம் கூடுவதையோ அல்லது ஊர்வலம் செல்வதையோ தடுக்க முடியும் என்றும் அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.
கட்டமைப்பு மாற்றம், ஜனநாயகம் மற்றும் சுதந்திரமான வாழ்வு என உறுதியளித்து 159 ஆசனங்களுடன் மக்கள் அதிபெரும்பான்மை ஆணையைக் கொடுத்துள்ள நிலையில், கொண்டுவரவுள்ள இச்சட்டத்தால் பொதுமக்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கவாதிகள், சிவில் அமைப்புகள் மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமைக் குரல்கள் நசுக்கப்படப் போகின்றன எனச் சுட்டிக்காட்டி சட்டமூலத்தை உடனடியாகக் கைவிடுமாறு தேசிய மக்கள் சக்தி அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அமலநாயகி,
இந்த போரினால் பாதிக்கப்பட்டு, காணாமலாக்கப்பட்டு, இந்த யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களாக இன்றைக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இன்றைய காந்தி பூங்காவிலே இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை செய்கின்றோம்.
கடந்த காலங்களில் எமது உறவுகள் காணாமலாக்கப்பட்டதும், ஒரு இன அழிப்பு செய்யப்பட்டதும் இந்த PTA சட்டத்தின் ஊடாகத்தான். இன்று வரையும் எங்களுடைய உறவுகளைத் தேடியவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.
இந்தச் சட்டங்களை வைத்துக்கொண்டு கடந்த கால அரசு செய்த குற்றங்கள், கடத்தல்கள், கொலைகள் இப்படியான விடயங்கள் கடந்த கால அரசுகளால் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தினால்தான் இடம்பெற்றது. இதற்கு இந்த பல 17 வருடங்கள் கழிந்தும், ஏன் 30, 35 வருடங்கள் கழிந்தும் இந்தச் சட்டங்களை வைத்துக்கொண்டு அரசு ஒவ்வொரு குடும்பங்களையும் அவல நிலைக்கு கொண்டு வந்திருந்தது.
எங்களுடைய உறவுகளைத் தேடும் உரிமையைக் கூட மழுங்கடிக்கும் நிலைமையாகத்தான் இந்த அரசு இன்னும் மிக மோசமான எங்களுடைய உறவுகளைக் கேட்கக் கூட இயலாத ஒரு பிஎஸ்ரிஏ சட்டத்தைக் கொண்டு வந்து எங்களது குரல்வளைகளை நெரித்து, எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதைக்கூட கேட்க இயலாத ஒரு சட்டப் நடைமுறையைத்தான் கொண்டு வருகின்றார்கள்.
ஆகவே, நாங்கள் கடந்த காலங்களில் பல போராட்டங்களை நடத்தி இருந்தோம், பல இடங்களில் நாங்கள் பதிவு செய்திருந்தோம், எங்களுக்கு பிரிஏ யும் வேண்டாம், பிஎஸ்ரிஏ யும் வேண்டாம் என்று சொல்லி. அதே போன்றுதான் இப்போது வரைக்கும் எங்களுடைய உறவுகளைத் தேடும் உரிமை இந்த நாட்டுக்குள் இல்லை. அதை இன்னும் ஒருமுறை சர்வதேச நாடுகளுக்கு எடுத்துரைக்கும் முகமாக இந்த அநுர அரசு கூட இந்த ஒரு பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் என்று சொல்லிக்கொண்டு இந்த மக்களை ஒடுக்கி, தங்களுடைய குரல்வளைகளை நெரித்து, தங்களுடைய உரிமைகளைக் கேட்க விடாது தங்களுடைய நிலங்களை, தங்களுடைய உறவுகளை, தங்களுடைய உரிமைகளை, தங்களுடைய பேச்சுச் சுதந்திரத்தைக் கூட நடத்த முடியாதவாறு இந்த பிஎஸ்ரிஏ சட்டத்தைக் கொண்டு வந்து இந்த மக்களை ஒடுக்குற முறையை தமிழர்களாகிய நாங்கள், பாதிக்கப்பட்ட தரப்பாக இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
ஆகவே, இந்த அரசு உடனடியாக ஊழல், இலஞ்சங்கள் அந்தந்த விடயங்களுக்காக எடுக்கிற கரிசனையை இந்த அரசாங்கம் வந்தும், இந்த இரண்டு வருடம் கடந்த நிலையிலும் இந்த வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி, அவர்களுக்கு என்ன நடந்தது என்ற ஒரு பொறுப்புக்கூறல் எந்தவொரு விடயமுமே இந்த அரசாலே இதுவரைக்கும் எந்தவொரு நகர்வும் நகர்த்தப்படவில்லை.
ஆகவே, இந்த அரசிலும் நாங்கள் நம்பிக்கை இழந்துதான் சர்வதேச விசாரணை வேண்டும், சர்வதேசத்தின் ஊடாக எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிய வேண்டும் என்ற ஒரு நோக்கோடு நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். அதைத் தடை செய்வதற்காகத்தான் இந்த அரசு இந்த PSTA சட்டத்தைக் கொண்டு வருகின்றதா என்ற ஒரு சந்தேகம் எங்களுக்குள்ளே எழுந்து கொண்டிருக்கின்றது.
எங்களுடைய உறவுகளுடைய நிலையை கண்டறிவதற்கான எங்களுக்கான ஒரு சுதந்திரத்தைத் தர வேண்டும். ஆகவே, பாதிக்கப்பட்ட மக்களாக நாங்கள் இந்த இடத்திலே கூற விரும்புவது எங்களுக்கு பிஎஸ்ரி யும் வேண்டாம், பிரிஏயும் வேண்டாம் என்ற ஒரு கோரிக்கையை இன்றைய நாள் வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ் மக்கள் சார்பாக, இந்த இடத்திலே பாதிக்கப்பட்ட ஒரு சமூகமாக, அனைத்து பொதுமக்கள் சார்பாக இந்தக் கோரிக்கையை விடுக்கின்றோம் என்றார்.
இப்போராட்டத்தின் இறுதியில் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரின் பிரதிகள் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதரகம் ஆகியவற்றிற்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





