யாழ். மாநகர சபையில் கடும் அமளி துமளி; திலீபன் சிலை அகற்றம் விவகாரத்தில் மோதிக்கொண்ட உறுப்பினர்கள்.!
தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் கடும் அமளி துமளி ஏற்பட்டது.
யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு மாநகர மேயர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில் நேற்று மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றபோதே இந்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
கடந்த கூட்ட அறிக்கையை அங்கீகரிப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையின்போது, அதில் இடம்பெற்றிருந்த சில விடயங்களை நீக்குமாறு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து, இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்போது தேசிய மக்கள் சக்தி அரசின் செயற்பாடுகள் தொடர்பாகவும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன் சபையில் இடம்பெற்ற கட்சிகள் மாறி மாறி விவாதங்களில் ஈடுபட்டன. இறுதியில், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கைக்கு இணங்க திருத்தங்களுடன் கடந்த கூட்ட அறிக்கை அங்கீகரிக்கப்பட்டது.
கடந்த செப்டெம்பர் மாதம் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், தியாக தீபம் திலீபனின் சிலையை வைப்பதற்கு மாநகர சபையில் அனுமதி கோரப்பட்டு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும், கடந்த செப்டெம்பர் 27 ஆம் திகதியன்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் அந்தச் சிலை அகற்றப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

