விஜய் சேதுபதியின் குட்டிக் கதையால் மீண்டும் சர்ச்சை!
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், திரைப்படத்தின் வெற்றி விழா அண்மையில் நடைபெற்ற நிலையில், அதில் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்த கருத்தொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.
‘சீதக்காதி’ திரைப்படத்தில் நடிப்பதற்காக இயக்குநர் பாலாஜி கமல்ஹாசன், அமிதாப் பச்சன், மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை பரிசீலித்ததாக விஜய் சேதுபதி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “இந்த கதாபாத்திரத்தில் கமல் சார் நடித்தால் நன்றாக இருக்கும், அமிதாப் பச்சன் சார் நடித்தால் நன்றாக இருக்கும், மோகன்லால் சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் கூறுவார். நான் அருகிலேயே இருக்கிறேனே, என்னை கேட்கவில்லையே என நினைத்தேன்” என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, தெருநாயை உதாரணமாகக் குறிப்பிட்ட விஜய் சேதுபதி, “தெருவில் இருக்கும் நாய் அழகாகவும் சிறப்பாகவும் சுற்றிக்கொண்டிருக்கும். ஆனால் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்தான் பிடிக்கும் என்றால் என்ன செய்வது?” எனக் கூறியுள்ளார்.
மேலும், தனது கருத்தை வேறு விதமாகப் புரிந்துகொள்ள வேண்டாம் எனவும் அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் சேதுபதியின் இந்தப் பேச்சு இடம்பெற்ற காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.