திருப்பெருந்துறையில் திண்மக்கழிவு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க விசேட குழு
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழுவின் மூலம் குறித்த பகுதிக்கு விஜயம் செய்து பிரச்சினைகளுக்கான விரைவான தீர்வினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.
இன்றைய தினம் முதல் அழைத்துவரப்பட்டதை தொடர்ந்து சபை நடவடிக்கைகள் வழமைக்கு மாறாக மாநகர கீதம் இசைக்காமல் மௌன இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மாநகரசபை உறுப்பினர்களினால் இது தொடர்பில் கேள்வியெழுப்பட்டதுடன் மட்டக்களப்பு மாநகரசபையின் வழமையினை மாற்றாமல் மாநகரசபை கீதம் இசைக்கப்பட்டே அமர்வு ஆரம்பிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
உள்ளுராட்சிமன்ற ஆணையாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாகவே இந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளதாக மாநகர முதல்வரினால் தெரிவிக்கப்பட்டபோதிலும் காலம்காலமாக நடைபெற்றுவரும் நடைமுறையினை மாற்றமுடியாது என மாநகரசபை உறுப்பினர்கள் எதிர்ப்பினை வெளியிட்டதை தொடர்ந்து மீண்டும் மாநகர கீதம் இசைக்கப்பட்டு மாநகரசபை அமர்வுகள் நடைபெற்றன.
இன்றைய அமர்வில் மாநகரசபையின் பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார் உட்பட மாநகரசபையின் உறுப்பினர்கள்,மாநகரசபையின் ஆணையாளர் தனஞ்செயன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர், உத்தியோகத்தர்கள்,மாநகரசபையின் செயலாளர் என பலர் கலந்துகொண்டனர்.
இன்றைய அமர்வின்போது மட்டக்களப்பு மாநகரசபைக்கான திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான உபவிதியொன்றை சபையில் சமர்ப்பித்த மாநகரசபையின் முதல்வர் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நிரலவும் திண்மக்கழிவு தொடர்பான பிரச்சினையை தீர்க்கும் வகையிலான நடவடிக்கைக்கு இந்த உபவிதி அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
இதன்போது மட்டக்களப்பு மாநகரசபையின் திருப்பெருந்துறை வட்டார உறுப்பினர் சண்முகதாஸன் அவர்கள் திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தினால் திருப்பெருந்துறையில் உள்ள மக்கள் பெரும் கஸ்டங்களை நீண்டகாலமாக எதிர்நோக்கிவருவதாகவும் இது தொடர்பில் தானும் நீண்டகாலமாக போராடிவரும் நிலையிலும் அது தொடர்பில் நீதிமன்ற கட்டளையொன்றை பெற்ற நிலையிலும் அதற்கான தீர்வில்லாமல் மக்கள் தொடர்ச்சியான பிரச்சினையை எதிர்கொள்வதாக தெரிவித்தார்.
திருப்பெருந்துறை மக்களின் பிரச்சினையை மாநகரசபையும் மாநகரசபையில் உள்ள மக்கள் பிரதிநிதிகளும் அரசியல்வாதிகளும் கவனத்தில் கொள்ளாமல் செயற்பட்டுவருவதாகவும் திருப்பெருந்துறை மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுவருவதாகவும் தினமும் உணவருந்தும்போதும் சுகாதாரமற்ற நிலையிலேயே வாழும் நிலையுள்ளாகவும் இங்கு சுட்டிக்காட்டினார்.
கடந்த சபையிலும் இது தொடர்பிலும் பலத்த போராட்டத்தினை தான் செய்தபோதிலும் அதற்கு எந்தவித தீர்வும் காணப்படாத நிலையில் இந்த சபையிலாவது அந்த பிரச்சினைக்கான தீர்வினை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையினை விடுத்ததுடன் அது தொடர்பிலான நீண்ட விளக்கத்தினையும் வழங்கினார்.
இதன்போது பிரதி முதல்வர் தினேஸ்குமார் குறித்த பகுதியின் நிலைமைகள் குறித்து அனைவரும் அறிந்துள்ளதாகவும் அங்குள்ள மக்களின் பிரச்சினைக்கு தீ}ர்வினை வழங்கவேண்டும் என்பதுடன் அதற்கான குழுவொன்றை நியமித்து பிரச்சினைக்கான தீர்வினை காண்போம் என தெரிவித்த நிலையில் சபை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்கொண்டுசெல்லப்பட்டன.
இன்றைய சபை அமர்வின்போது மாநகரசபையின் உறுப்பினர் உதயராஜ் அவர்களினால் மாநகரசபையின் ஊழியர்கள் நியமனம்போது முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் சபையில் அமளிதுமளி ஏற்பட்டதுடன் காரசாரமான விவாதங்களும் இடம்பெற்றன.
அத்துடன் சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் சபையினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் சபையில் பிரேரணை மாநகர முதல்வரினால் சமர்பிக்கப்பட்டு அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





