மக்களை ஒருபோதும் நாம் கைவிடமாட்டோம்; அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.!
தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றியே தீருவோம் என்றும், தம்மை நம்பி வாக்களித்த மக்களை ஒருபோதும் கைவிடமாட்டோம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அரசு மீது பொய்ப் பிரசாரங்களை முன்வைப்பதன் மூலம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம் என ஊழல்வாதிகளான எதிர்க்கட்சியினர் கனவு காண்கின்றனர் என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.
அனுராதபுரம் – நொச்சியாகம பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘நமது அரசு: ஈராண்டு ஆட்சி – நாட்டுக்கு மாட்சி’ மாபெரும் பேரணியில் கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“பொருளாதார ரீதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மெதுமெதுகொண்டு மீண்டு வரும் நிலையில்தான் நாம் தற்போதைய அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்கின்றோம். தற்போது நாம் பொருளாதார ரீதியில் ஓரளவு ஸ்திரமடைந்துள்ளோம். இருப்பினும் முழுமையான பொருளாதார சுயாதீனத்தை இன்னும் நாம் அடையவில்லை.
அந்தப் பொருளாதார சுயாதீனத்தை விரைவில் அடைவதற்குரிய அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.
இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரத்துறையைப் பாதுகாப்பதற்கும், மக்களுக்கான அத்தியாவசிய சேவை வழங்கலை மேலும் வினைத்திறனாக்குவதற்கும் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
குறிப்பாக, பாடப்புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதிசேர் வரியை முற்றிலுமாக நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கான திட்டங்கள் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும்.” – என்றார்.






