லொனக் தோட்ட பெனச் பிரிவு உள்ளக வீதியை புனரமைக்க மக்கள் கோரிக்கை
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, வட்டவளை–லொனக் பிரதான வீதியிலிருந்து பெனச் (மீனாட்சி) தோட்டத்திற்குச் செல்லும் சுமார் 750 மீற்றர் நீளமான உள்ளக வீதியை கொங்கிறீட் செய்து புனரமைக்குமாறு அம்பகமுவ பிரதேச சபையிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட லொனக் தோட்டம், மிகவும் கஷ்டப் பிரதேசமாக காணப்படுவதுடன், தோட்டத்திற்கான பிரதான வீதி இதுவரை முழுமையாக புனரமைக்கப்படாததால் மக்கள் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான வீதியை முழுமையாக புனரமைப்பதற்குத் தேவையான நிதி வளம் பிரதேச சபையிடம் இல்லாததை தாம் புரிந்துகொள்வதாகக் குறிப்பிட்டுள்ள மக்கள், குறைந்தபட்சம் உள்ளக வீதிகளையாவது புனரமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, வட்டவளை–லொனக் பிரதான வீதியிலிருந்து பெனச் (மீனாட்சி) தோட்டத்திற்குச் செல்லும் சுமார் 750 மீற்றர் நீளமான உள்ளக வீதியை கொங்கிறீட் செய்து தருமாறு அம்பகமுவ பிரதேச சபை தவிசாளர் கப்பில நாகந்தலவிடம் பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
மேலும், இதே கோரிக்கை தொடர்பில் அம்பகமுவ பிரதேச சபையின் பிரதி தவிசாளர் இரா. இராஜேந்திரனுக்கும் மக்கள் கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு தமது நீண்டகால போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக பெனச் தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.