யாழில். திறந்தவெளியில் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு
யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இன்று (20) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஏற்படும் காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறு கோரி வைத்தியர் உமாசுகி நடராஜாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு அழைக்கப்பட்ட போதே, மாநகர சபை சார்பில் ஆஜரான சட்டத்தரணி இதனைத் தெரிவித்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு அழைக்கப்பட்டது.
இம்மனு நீதிமன்றில் அழைக்கப்பட்டபோது, யாழ்ப்பாணம் மாநகர சபை சார்பில் ஆஜரான சட்டத்தரணி கே. எம். கணேசராஜா குறிப்பிடுகையில், யாழ்ப்பாணம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் எரிக்கப்படும் விதம் தொடர்பிலான விசேட அறிக்கையொன்றை எதிர்வரும் வழக்குத் தவணையின் போது சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கருத்துத் தெரிவிக்கையில், சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய திறந்தவெளியில் குப்பைகளை எரிப்பது குற்றமாகும் எனக் குறிப்பிட்டார்.
அந்த ஏற்பாடுகளின் கீழ் யாழ்ப்பாணம் மாநகர சபை உள்ளடங்குகிறதா என்பது குறித்து ஆராய்ந்து, எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட வாதங்களை கருத்திற்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், இந்த வழக்கு விசாரணையை மீண்டும் பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் இந்த நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து அறிவிக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டது.


