மத நல்லிணக்கத்தின் மூலம் சமூகத்தை வலுப்படுத்த புதிய நடவடிக்கை.!
கடந்த ஐந்து ஆண்டுகளாக நுவரெலியா மாவட்டத்தில் மத நல்லிணக்கம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக செயற்பட்டு வரும் நுவரெலியா மாவட்ட சர்வமதக் குழு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்காக “ACT NOW” என்ற தொனிப்பொருளின் கீழ் புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.
இதன் அடிப்படையில், குழுவை மறுசீரமைத்து அதன் உறுப்பினர்களின் அறிவு மற்றும் சமூகத் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சிப் பட்டறை ஒன்று 31ஆம் திகதி முற்பகல் நுவரெலியா சர்வதேச பௌத்த நிலையத்தில் நடைபெற்றது.
இலங்கை தேசிய சமாதானப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பௌத்த, இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், உள்ளூராட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், மத மற்றும் கலாசார நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பல்வேறு மதங்கள் மற்றும் கலாசாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினர் ஒரே மேடையில் ஒன்றிணைந்தமை இந்நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக அமைந்தது.
பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், பாகுபாடின்மை, நம்பிக்கை, உரிமையுணர்வு மற்றும் நல்வாழ்வு ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பங்கேற்பாளர்களை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
பல்வேறு மத மற்றும் சமூகப் பின்னணிகளைக் கொண்ட மக்களிடையே பரஸ்பர நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துதல், கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ளுதல் மற்றும் ஒவ்வொருவரினதும் மத மற்றும் சமூக அடையாளங்களை பரஸ்பரம் மதித்து செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
மேலும், பங்கேற்பாளர்களுக்கிடையிலான தொடர்புகள் மற்றும் குழு ரீதியான செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு குழுச் செயற்பாடுகளும் இடம்பெற்றன.
புதிய வேலைத்திட்டத்தின் கீழ் மதத் தலைவர்களிடையே மட்டுமன்றி, பல்வேறு மதங்கள் மற்றும் தேசிய சமூகங்களுக்கிடையிலும் நம்பிக்கை, புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
குறிப்பாக, இயற்கை அனர்த்தங்கள் அல்லது ஏனைய அவசர நிலைமைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மக்களிடையே தேவையற்ற பிளவுகள் ஏற்படுவதைத் தடுப்பதுடன், மதத் தலைவர்கள் மற்றும் சர்வமதக் குழுவின் வலையமைப்பைப் பயன்படுத்தி மக்களுக்கு விரைவான உதவிகளை வழங்குவதும் இவ்வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அனர்த்த முகாமைத்துவம், ஒழுக்கமும் பொறுப்புணர்வும் கொண்ட சமூகத்தை உருவாக்குதல், அமைதியான சமூகச் சூழலை ஏற்படுத்துதல் மற்றும் மதப் பன்முகத்தன்மையை சமூகத்தின் பலமாக மாற்றுதல் ஆகியவற்றுக்காக அனைத்து மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் கூட்டுப் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் நல்லிணக்கத்துடன் வாழும் நுவரெலியா போன்ற பல்மத மற்றும் பல்கலாசார மாவட்டத்தில், இத்தகைய வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பது மத வேறுபாடுகளைப் பிரிவினைக்கான காரணியாக அல்லாது, சமூக ஒற்றுமைக்கான அடித்தளமாக மாற்றுவதற்கான முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகின்றது.
இந்நிகழ்வில் இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் திட்டப் பணிப்பாளர் நிரோஷா அந்தனி, உதவி முகாமையாளர் ஆயிஷா ஜயவர்தன மற்றும் ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் இரேஷா உதெனி ஆகியோரும் கலந்துகொண்டனர்.


