பிரதமருடனான சந்திப்புக் குறித்து சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ கருத்து
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை இன்றைய தினம் சனிக்கிழமை வடக்கு–கிழக்கில் காணி உரிமைக்காக போராடி வரும் மக்களின் சார்பாக கலந்து கொண்டு எமது கோரிக்கைகளை சமர்ப்பித்தோம்.
எமது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட பிரதமர் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்து வதாக உறுதியளித்துள்ளதாக சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
யாழ்ப்பாணம் கச்சேரியில் இன்று (22) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற மாற்று வலுவுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் அவர்களை, நிகழ்வு நிறைவடைந்த பின்னர் வடக்கு–கிழக்கு பகுதிகளில் தமது பூர்வீக காணிகளை இழந்து, நீண்ட காலமாக அவற்றை மீட்டெடுப்பதற்காக போராடி வரும் மக்களின் சார்பில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வைத்து நேரடியாக சந்தித்தோம்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மாவட்டங்களின் மயிலத்தமடு–மாதவனை உள்ளிட்ட வடக்கு–கிழக்கு பகுதிகளில் காணி உரிமைக்காக நீண்ட காலமாக போராடி வரும் மக்களின் நியாயமான கோரிக்கைகள், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் நீண்ட காலமாக நிலவி வரும் காணி அபகரிப்பு தொடர்பான எமது ஆழ்ந்த கவலையை பிரதமர் அவர்களிடம் எடுத்துரைத்தோம்.
கடந்த அரசாங்கங்களின் காலப்பகுதிகளில் காணி உரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாமல், மக்கள் தொடர்ச்சியாக கால தாமதத்திற்கும் புறக்கணிப்பிற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக போராடி வருகின்றனர்.
புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டிருந்த மக்களுக்கு, ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் காணி உரிமை பிரச்சினைகளுக்கு முழுமையானதும் நீதியானதுமான தீர்வு கிடைக்காத நிலை ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மக்களின் எதிர்பார்ப்புகளையும், அவர்களின் நீண்டகாலப் போராட்டத்தையும் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு நியாயமானதும் நிலையானதுமான தீர்வை வழங்க வேண்டும் என பிரதம வலியுறுத்தினோம்.
மேலும், காணி இழந்த மக்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் நீண்டகாலப் போராட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப் பட்ட மகஜரையும் பிரதமர் அவர்களிடம் கையளித்தோம்.
பிரதமர் அவர்கள் எமது மகஜரை அன்புடன் பெற்றுக்கொண்டு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்துவதாக எமக்குத் தெரிவித்தார்.
வடக்கு–கிழக்கில் காணி உரிமைக்காக போராடி வரும் மக்களின் குரலை தொடர்ந்து உரிய தரப்புகளிடம் எடுத்துச் செல்வதுடன், அவர்களுக்கு நீதியானதும் நிரந்தரமானது மான தீர்வு கிடைக்கும் வரை அவர்களின் நியாயமான போராட்டத்திற்கு எமது ஆதரவை தொடர்ந்து வழங்குவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.