வட மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நன்கொடை.!
“சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு குருதி சுத்திகரிப்பு இயந்திரம் என்பது ஒரு மருத்துவ உபகரணம் மாத்திரமல்ல, தொடர்ந்தும் வாழ்வதற்கான ஒரு வாய்ப்பாகும். அந்த வாய்ப்பை வடக்கு மாகாண மக்களுக்கு, குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் வாழும் நோயாளிகளுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 83 ஆயிரத்து 544 கனேடிய டொலர் பெறுமதியான ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்படுவது மிகவும் பெறுமதியான மனிதநேயப் பங்களிப்பாகும்.” – என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
இந்த இயந்திரங்கள் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைகளுக்கும், மல்லாவி ஆதார மருத்துவமனைக்கும் வழங்கப்படவுள்ளதுடன், அவற்றுக்கான வரித் தீர்வாக வடக்கு மாகாண சபையால் 3.5 மில்லியன் இலங்கை ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
செந்தில்குமரன் நிவாரண நிறுவனமும் வடக்கு மாகாண சபையும் இணைந்து வடக்கு மாகாண மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மருத்துவ சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது.
கனடா உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் மருத்துவத்துறை நிபுணர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், சிறுநீரக நோயாளிகள் சிகிச்சைக்காக வாரத்தில் பல தடவைகள் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்படுவதுடன், சில குடும்பங்கள் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டார். ஒரு நோயாளியின் சிகிச்சை அவரின் தனிப்பட்ட பிரச்சினையாக மட்டுப்படாமல், முழுக் குடும்பத்தின் வாழ்வியலையும் பாதிக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார். எனவே, குருதி சுத்திகரிப்பு வசதிகளை நோயாளிகளின் வாழ்விடங்களுக்கு அருகில் கொண்டு செல்வது மருத்துவ சேவையை மேம்படுத்துவதுடன், அவர்களது வாழ்க்கைச் சுமையையும் குறைக்கும் மனிதநேயப் பணியாக அமையும் என்றார்.
சிறுநீரக நோய் தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் கவனத்துக்குரிய சுகாதாரச் சவாலாக மாறியுள்ளதுடன், வடக்கு மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இது தொடர்பான ஆய்வுகளும் சுகாதாரத் தரவுகளின் அடிப்படையிலான கவனமும் அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
குடிநீரின் தரம், நீண்டகால நீர் பயன்பாடு, விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், இந்நோய்க்கு ஒரே ஒரு காரணியைச் சுட்டிக்காட்டுவது அறிவியல் ரீதியாகப் பொருத்தமானதல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
விவசாயம், சுற்றுச்சூழல், குடிநீர் மற்றும் மக்களின் சுகாதாரம் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிகிச்சை வழங்குவதோடு மட்டும் இந்தப் பிரச்சினையை அணுகாமல், சிறுநீரக நோய் அதிகரிப்பதற்கான காரணிகளைப் புரிந்துகொண்டு தடுப்பு நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.