வடக்கு – கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றில் சஜித் உரை!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
உப்பள அமைப்பும் காணிப் பிரச்சினைகளும்
“தனியார் காணிகளை எடுத்து உப்பு உற்பத்தி நிலையங்களை ஸ்தாபிப்பதை விட, அரச காணிகளை எடுத்து இதனைச் செய்யுங்கள்.” – என்று அவர் வலியுறுத்தினார்.
வடக்கு மாகாணத்தின் வன்னி மாவட்டத்திலும், முல்லைத்தீவு நிர்வாக மாவட்டத்தில், கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் 54 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பளம் அமைக்கப்படுகின்றது என்றும், அதனை விட மாத்தளன் பிரயோசனமானது என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார் என்று குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சர் ரவிகரனுடன் பேசி குறைபாடுகளைத் தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கோரினார்.
மேலும், வடக்கு மாகாணத்தில் பாரிய காணிப் பிரச்சினைகள் நிலவுகின்றன என்றும், கடந்த காலங்களில் பொதுமக்களின் தனியார், விவசாய மற்றும் வதிவிடக் காணிகள் அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தையும் தீர்வையும் பெற்றுக்கொடுக்குமாறும் வலியுறுத்தினார்.
“இஸ்லாமிய பெண் உத்தியோகத்தர்களின் சீருடை தொடர்பான பிரச்சினையால் அவர்களை வேறு வைத்தியசாலைக்கு மாற்றியமை பொருத்தமான விடயமல்ல.” என்றும் இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விசனம் தெரிவித்தார்.
கல்முனை வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்ற முஸ்லிம் பெண் ஊழியர்களைச் சீருடை தொடர்பான விவகாரத்தில் வேறு வைத்தியசாலைக்கு இடமாற்றியுள்ளமை பொருத்தமற்ற நடவடிக்கையாகும் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், எமது நாட்டில் அவரவர் மத மற்றும் கலாசாரத்தைப் பின்பற்றும் உரிமை அனைவருக்கும் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டினார்.
இந்த அரசு தமது தேர்தல் மேடைகளில் இனம், மதம், குலம், வகுப்பு ரீதியான எந்தப் பாரபட்சமும் பார்க்காமல் செயற்படுவதாகக் கூறிவிட்டு, தற்போது புதிதாக நியமனம் பெற்ற 9 பேரை சீருடை விவகாரத்துக்காக இடமாற்றம் செய்வது கொள்கை விளக்கங்களுக்கு முரணானது என்றார்.
எனவே, உடனடியாக மேற்படி 9 ஊழியர்களையும் மீண்டும் கல்முனை வைத்தியசலையிலேயே பணியில் அமர்த்தி, அவர்களின் கலாச்சாரத் துக்கேற்ப சீருடை அணிய அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.