த.வி.பு பயிற்சி முகாம் தொடர்பாக போலிப் பிரச்சாரம் செய்தவர் கைது.!
சமூக ஊடகங்கள் ஊடாக காணொளி ஒன்றின் மூலம் ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தி, உறுதிப்படுத்தப்படாத போலித் தகவல்களை வெளியிட்ட நபர் ஒருவர் பயங்கரவாத புலனாய்வு மற்றும் விசாரணைப் பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பளை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று நடாத்தப்பட்டு வருவதாகச் சமூக ஊடகங்கள் வாயிலாகவும், ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்தியும் உறுதிப்படுத்தப்படாத போலித் தகவல்களைப் பரப்பியமை தொடர்பிலேயே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பெல்லன்வில – பொரலஸ்கமுவை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவராவார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்று (19) புதன்கிழமை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், அவருக்கு எதிராக இலங்கை தண்டனைச் சட்டக்கோவை மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.