சிறைச்சாலை அதிகாரிகளை கொ*லை செய்ய திட்டம்; பாதாள உலகக் கும்பலை சேர்ந்த ஒருவர் கைது.!
மெகசின் சிறைச்சாலை அதிகாரிகளைக் கொலை செய்வதற்கான திட்டங்கள் மற்றும் பல முக்கிய தகவல்கள் அடங்கிய குரல் பதிவுகளுடனான கைப்பேசியுடன், ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் பொரளை – வனாத்தமுல்ல பகுதியில் சஹஸ்புர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் ஆவார்.
வெலிக்கடை சிறைச்சாலையின் மதிலுக்கு மேல் சட்டவிரோத பொருட்களைச் சிறைச்சாலைக்குள் எறிந்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘போல சுரேஷ்’ என்பவரது வீட்டைச் சோதனையிட்டபோதே, அங்கிருந்த சந்தேக நபரை சஹஸ்புர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 7 கிராமும் 190 மில்லிகிராமும் கொண்ட ‘ஐஸ்’ போதைப்பொருளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கடந்த 2025 ஜூலை 7ஆம் திகதி கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டரப்பல வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று இருவரைக் சுட்டுக் கொலை செய்த சம்பவத்தில், இவர் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், 6ஆம் திகதி மெகசின் சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்னரே இந்த சந்தேக நபர் பிணையில் விடுதலையாகி வந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.