உள்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை இயக்கிய பிரதான நபர் கைது.!
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கங்கன’ என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை இயக்கும் பிரதான நபர், போதைப்பொருளுடன் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஆவார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ஹோமாகம பகுதியிலுள்ள ஹைலெவல் வீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 2 கிலோகிராமிற்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் 800 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் தங்கியிருக்கும் ‘கங்கன’வின் நேரடி வழிகாட்டலின் கீழ், இச்சந்தேகநபர் நீண்டகாலமாக மிகவும் இரகசியமான முறையில் இலங்கையில் போதைப்பொருள் விநியோகக் கட்டமைப்பை நடத்தி வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கை மற்றும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.