போதைப்பொருளுடன் இருவர் கைது.!
கொழும்பு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இரு பகுதிகளிலும் பொலிஸார் மேற்கொண்ட தனித்தனி நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கொலை முயற்சி மற்றும் துப்பாக்கிச் சூடு அச்சுறுத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கந்த பகுதியில் 25 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 7.2 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை 19 ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிசல அரண மயான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு முயற்சி சம்பவத்திலும், கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவில் துப்பாக்கியைக் காட்டித் தாக்கி அச்சுறுத்திய சம்பவத்திலும் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவராக இவரே செயற்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் கும்பல் ஒன்றின் வழிகாட்டலின் பேரிலேயே இக்குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இக்குற்றங்களைச் செய்வதற்காக அவருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 2 இலட்சம் ரூபாயில், மீதமான 55,000 ரூபாய் பணம் மற்றும் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 3 கைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதனிடையே, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் திருகோணமலை உப பிரிவின் அதிகாரிகள் உப்புவெளி பொலிஸ் பிரிவில் நடத்திய மற்றுமொரு விசேட சோதனையின் போது 38 வயதுடைய திருகோணமலையைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 123.3 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் மேல் மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினரும், உப்புவெளி பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.