இராமாயணம் திரைப்படத்தின் முன்னோட்டம் குறித்து சாய் பல்லவி உருக்கம்!
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் இராமாயணம் திரைப்படத்தின் பிரத்தியேக முன்னோட்ட காட்சி திரையிடல் நிகழ்வு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டு, திரைப்படம் தொடர்பான தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இதன்போது நிகழ்வில் பேசிய நடிகை சாய் பல்லவி, சீதை கதாபாத்திரத்தில் நடிப்பது தனக்குக் கிடைத்த ஆசீர்வாதம் என தெரிவித்தார்.
மேலும், ஒரு தெய்வீக கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது எளிதான விடயம் அல்ல. அந்தப் படைப்பை சிறந்த முறையில் உருவாக்குவதற்கு முழு அர்ப்பணிப்புடன் உழைக்கும் குழு தேவை.
சீதை கதாபாத்திரத்தில் நடிக்க நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். நடிப்பை முன்கூட்டியே திட்டமிட்டு அணுகவில்லை. தியானம் செய்யும் போது, சீதை அம்மா, நீங்கள் என் மூலம் செயல்படுங்கள், இந்த திரைப்படத்திற்காக நீங்கள் விரும்பும் வகையில் என் நடிப்பு அமையட்டும்’ என வேண்டிக்கொள்வேன்” எனக் குறிப்பிட்டார்.
இந்த திரைப்படத்தில் இராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, இராவணனாக யஷ், அனுமாராக சன்னி தியோல், லட்சுமணனாக ரவி துபே, சூர்ப்பனகையாக ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.
இராமாயணம் திரைப்படத்தின் முதல் பாகம், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என திரைப்படக்குழு அறிவித்துள்ளது.