அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை : ஈரான் முன்வைத்த முக்கிய நிபந்தனைகள்!
அமெரிக்காவுடன் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னதாக, ஈரான் தனது முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவை செயலாளர் மொஹ்சென் ரெசாயி (Mohsen Rezaee) இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்டார் மத்தியஸ்தராக செயற்பட்டு, ஈரான் முன்வைத்த நிபந்தனைகளை அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாகவும், தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதிலை எதிர்பார்த்து வருவதாகவும் ரெசாயி கூறியுள்ளார்.
அதன்படி, அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், முடக்கப்பட்டுள்ள ஈரானிய நிதியை விடுவித்தல் மற்றும் ஈரானுக்கு எதிரான கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருதல் ஆகியவை முக்கிய நிபந்தனைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.
ஈரானின் இறையாண்மையை ஏற்றுக்கொள்வது மற்றும் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை எட்டுவது தொடர்பிலும் ஈரான் வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிரான போரில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய கட்டத்தில் இருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கட்டார் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்த முயற்சிகளுக்கு மத்தியில் அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.