உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சமூக ஊடகங்களைப் பார்த்துத் தகவல் அறியும் அமைச்சர் எதற்கு? – அஜித் பி. பெரேரா கேள்வி!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
35 பார்வைகள்


நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கொடூர வன்முறை நெருக்கடியை முறையாகக் கையாள நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தவறிவிட்டார் எனக் குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா, இந்த வன்முறை தொடர்பாக அரசின் ஒட்டுமொத்தப் போக்கையும் கடுமையாகச் சாடியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சிறைச்சாலைக்குள் முதன்முதலில் மோதல் வெடித்தது முதல், மறுநாள் திங்கட்கிழமை வன்முறை தீவிரமடையும் வரை, அதனைத் தடுக்க என்னென்ன உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை விளக்க நீதி அமைச்சர் தவறிவிட்டார்.

இரு கைதிகள் குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு, உயிரிழப்புகளும் காயங்களும் பதிவாகியிருந்த நிலையிலும், பெண் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும், எதிர்த்தரப்புக் குழுக்களைத் தனித்தனியாகப் பிரிப்பதற்கோ, பாதுகாப்பை பலப்படுத்துவதற்கோ அல்லது நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன்னர் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்கோ அதிகாரிகள் அவசர நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இந்த விவகாரத்தில் அரசின் உயர்மட்டத் தலையீடு ஏன் இருக்கவில்லை? இது தொடர்பாக அவசரக் கூட்டங்கள் ஏதும் கூட்டப்பட்டதா? இராணுவம் அல்லது சிறைச்சாலையின் விசேட அதிரடிப்படையினர் சரியான நேரத்தில் ஏன் நிலைநிறுத்தப்படவில்லை? சிறைக்குள் மரணங்கள் பதிவாகிய பின்னர், சட்டப்படி அந்தப் பகுதி நீதிவானுக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டு அவர் இதில் ஈடுபடுத்தப்பட்டாரா?

சிறைச்சாலை நிர்வாகத்தின் பலவீனங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பலமுறை எச்சரிக்கப்பட்ட போதிலும், சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு நீண்டகாலமாக ஒரு நிரந்தர சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நியமிக்கப்படாமல், நிலையற்ற தலைமையின் கீழ் திணைக்களம் இயங்கி வருகின்றது.

திங்கட்கிழமை நீதி அமைச்சர் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்தில், சிறைச்சாலையில் 10 பேர் இறந்தார்களா, 15 பேரா அல்லது 20 பேரா என்று தமக்குத் தெரியவில்லை என்றும், கடந்த இரண்டு மணிநேரமாகத் தான் சமூக ஊடகங்களைப் பார்க்கவில்லை என்றும் நீதி அமைச்சர் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார். நாட்டின் சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான ஓர் அமைச்சர், இவ்வளவு பெரிய சம்பவத்தைப் பற்றிய தகவல்களைத் திணைக்கள அதிகாரிகளிடம் இருந்து நேரடியாகப் பெறாமல், சமூக ஊடகங்களை நம்பியிருக்க வேண்டிய நிலையில் உள்ளார் என்றால், இப்படி ஒரு அமைச்சர் எதற்கு?

சிறைச்சாலை அமைப்புக்குப் பொறுப்பான அமைச்சர், பேரழிவின் அளவைக் குறித்துத் தெளிவிலாமல் பேசுவதை விடுத்து, சிறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரிடமிருந்து உடனுக்குடன் துல்லியமான தகவல்களைப் பெற்றிருக்க வேண்டும்.

முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை வன்முறையைத் தொடர்ந்து சிறைச்சாலைக்குள் கடுமையான பதற்றம் நிலவிய போதிலும், நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வராத ஒரு சூழலில், இரண்டாம் திங்கட்கிழமை காலை கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் வழக்கமான பணிகளைச் சிறை அதிகாரிகள் ஏன் மீண்டும் தொடங்க முயன்றனர்?

சமீபத்திய ஆண்டுகளில் இடம்பெற்ற மிக மோசமான இந்தச் சிறைச்சாலை வன்முறை எவ்வாறு இவ்வளவு தூரம் தீவிரமடைய அனுமதிக்கப்பட்டது என்பது குறித்துப் பொதுமக்கள் உண்மைகளை அறியத் தகுதியானவர்கள் என்பதால், நீதி அமைச்சு, ஜனாதிபதி, சட்ட அமுலாக்க முகவர் அமைப்புகள் மற்றும் சிறை அதிகாரிகள் எடுத்த முடிவுகள் உள்ளிட்ட ஒட்டுமொத்தப் பதில் நடவடிக்கைகள் குறித்த முழுமையான காலவரிசையை அரசு நாடாளுமன்றத்துக்கு வழங்க வேண்டும்.” – என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா மேலும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

27 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

30 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

52 0 0