படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு.!
மாது ஆற்றில் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவர் மீது முதலை ஒன்று திடீரெனத் தாக்கியதில், படகு கவிழ்ந்து ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் அம்பலாங்கொடை – வத்துகெதர பகுதிக்குட்பட்ட மாது ஆற்றில் நேற்று (25) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
வத்துகெதர பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது நண்பருடன் இணைந்து படகில், மாது ஆற்றுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென வெளிப்பட்ட முதலையொன்று அவர்கள் பயணித்த படகை தாக்கியுள்ளது.
இதனால் படகு தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது. இதன்போது நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் வத்துகெதர பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.