யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகள் சேதப்படுத்தப்பட்டமைக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகள் சேதப்படுத்தப் பாட்டமைக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தினால் மானவர்களுடன் இணைந்து ஒழுங்கமைக்கப்பட்ட வெசாக் பண்டிகைக்கான அலங்கார வெளிச்சக்கூடு ஒன்று, இனந்தெரியாத சமூக விரோதிகளால் 01.06.2026 (திங்கட்கிழமை) அன்று திட்டமிட்டு சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்திற்கு பல்கலைக்கழக மாணவர் சமூகமாக எமது வலுவான கண்டனங்களைப் பதிவு செய்கின்றோம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகமும், இது தொடர்பில் தொடர்புடையவர்களை இனங்கண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி நிற்கின்றோம்.
பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே, குறிப்பாக இனங்களுக்கு இடையிலான நல்லுறவையும் சமத்துவத்தையும் பேணும் நோக்கில், பீடங்களின் மாணவர் ஒன்றியங்கள் உட்பட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இது போன்ற பல பொதுவான நிகழ்வுகள் தொடர்ச்சியாக ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய நிகழ்வுகள் பல காலங்களாக எமது பல்கலைக்கழகத்தில் எவ்வித தடங்கலுமின்றி இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயினும், மாணவர்களிடையேயான இந்த நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் நோக்கில், தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களிடையே ஒரு புரிந்துணர்வின்மையையும், தேவையற்ற விரிசலையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே இச்சதிமுயற்சியின் பின்னாலுள்ள உள்நோக்கமாக இருக்கிறது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாகிய நாங்கள், எமது மக்களின் பறிக்கப்பட்ட உரிமைகளுக்காகவும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். .
அதேவேளை, நாம் ஒருபோதும் சிங்கள மக்களை எதிரிகளாகக் கருதியதில்லை;
எமது வலிகளையும் நியாயப்பாடுகளையும் அவர்களுக்குத் தெளிவுபடுத்தவே எப்போதும் முயன்று வருகிறோம்.
இவ்வாறான சூழலில், எமது உரிமை சார்ந்த செயல்பாடுகளுக்கும் ஒட்டுமொத்த மாணவர் சமூகத்திற்கும் இனவாதச் சாயம் பூசும் நோக்கோடே இச்சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்திற்குள் நடந்துள்ள இச்செயல், எமது மாணவ சமூகங்களிடையே தேவையற்ற பிணக்கினை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, மாணவர்களாகிய நாங்கள் இன வேறுபாடுகள் இன்றி, எங்களுக்குள் உள்ளக முரண்பாடுகளை விதைக்க எத்தனிக்கக்கூடிய இத்தகைய விஷமச் சக்திகளை இனங்கண்டு, அவற்றுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய தேவையையும், விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தையும் இந்த நேரத்தில் உறுதியுடன் வலியுறுத்துகின்றோம் என்றும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
