மன்னாரில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை!
மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
உண்மையிலேயே இந்த மக்கள் கடந்த காலத்திலே யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, தங்களது இடத்தை விட்டு வேறு இடங்களிலே குடிபெயர்ந்து இருக்கிறார்கள்.
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த போதிலும் முன்னைய அரசாங்கங்கள் எவையுமே பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்காக எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
ஆனால் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற ரீதியில் அவற்றினை விடுவிக்க துரிதமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
இதற்காக நாங்கள் முதலாவதாக முள்ளிக்குளம், அதனைத் தொடர்ந்து சிலாவத்துறை கடற்படை முகாம், அதனைத் தொடர்ந்து தலைமன்னார், வங்காலைப்பாடு, மற்றும் பள்ளிமுனை போன்ற இடங்களிலே உள்ள கடற்படை முகாம்களைப் பார்வையிட்டோம்.
அங்கே மக்களினுடைய காணிகள் விடுவிக்கப்படவிருக்கின்றன.
குறிப்பாக முள்ளிக்குளம் பகுதியில் பாடசாலை, தேவாலயம், பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், மக்களினுடைய குடியிருப்புகள் காணப்படுகின்றன.
மக்கள் தொழிலுக்குச் செல்லக்கூடிய பாதைகளும் மூடப்பட்டிருக்கின்றன.
மேற்படி இடங்களை விடுவிப்பதற்கு உரிய சாதகமான சூழ் நிலைகள் இருக்கிறது.
இன்றைய தினம் கள விஜயத்தின் போது சேகரிக்கப்படும் தரவுகள் அனைத்தும் பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு ஜனாதிபதி முன்னிலையில் முன்வைக்கப்படும்.
அங்கு கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு, இந்த மக்களுக்கு நியாயமான தீர்வு அல்லது சாதகமான முறையிலே தீர்வு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

