உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஜனாதிபதிக்கு எதிராக ஐ.நா.வில் முறைப்பாடு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

மே தினப் பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மனோ கணேசன், வே.இராதாகிருஷ்ணன், ஜீவன் தொண்டமான், ரஞ்சித் மத்தும பண்டார, தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட 24 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முறைப்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்கள் சுதந்திரம் தொடர்பான சிறப்பு அறிக்கையாளருக்கு இந்த முறைப்பாட்டுக் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டுக் கடிதத்தில்,
“2026 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி சர்வதேச அனைத்துலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பொதுப் பேரணியின் போது, ஜனாதிபதி, 2026 மே 25 ஆம் திகதி வழங்கப்படவிருக்கும் ஒரு நீதித்துறைத் தீர்ப்பு குறித்துப் பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டவுடன், பொதுமக்கள் அதனைக் “கைதட்டி வரவேற்க” முடியும் என்றும் ஜனாதிபதி தமது உரையில் குறிப்பிட்டார்.

இந்த அறிக்கை, நிலுவையில் உள்ள நீதிமன்றத் தீர்ப்பு குறித்த முன் அறிவு இருப்பது போன்ற தோற்றம், உணரப்பட்ட அல்லது உண்மையான நிர்வாகத் தலையீட்டின் ஆபத்து, நீதித்துறை நடுநிலைமை மீதான பொதுமக்களின் நம்பிக்கை சிதைவு ஆகிய கடுமையான கவலைகளை எழுப்புகின்றது.

அத்துடன், தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர், வரவிருக்கும் ஒரு குறிப்பிட்ட முடிவைக் குறிப்பிடும் துல்லியத்தன்மை என்பன தீர்ப்பில் முறையற்ற செல்வாக்கு செலுத்தப்படலாம் என்ற நியாயமான அச்சத்தை உருவாக்குகின்றன.

இத்தகைய கருத்துக்கள் நீதித்துறையின் சுதந்திரத்தையும் நம்பகத்தன்மையையும் சீர்குலைக்கக்கூடும் என்று இலங்கை சட்டவாளர்கள் சங்கம் முறைப்படி கவலை தெரிவித்துள்ளது.

இலங்கை அரசமைப்பு, நீதித்துறை சுதந்திரத்தை அரசின் அடித்தளக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கின்றது.

குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான அனைத்துலக உடன்படிக்கையின் 14 ஆவது பிரிவு, சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற தீர்ப்பாயத்தால் நியாயமான விசாரணை அளிக்கப்படுவதை உறுதி செய்கின்றது.

நீதித்துறையின் சுதந்திரம் குறித்த ஐ.நாவின் அடிப்படைக் கோட்பாடுகள் (1985), நீதித்துறை முறையற்ற தலையீடுகளிலிருந்து விடுபட்டிருக்க வேண்டும், அரசு அதிகாரிகள் நீதித்துறை சுதந்திரத்தைக் குலைக்கும் செயல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன.

ஜனாதிபதியின் கூற்று, அது உள்நோக்கத்துடன் கூறப்படாவிட்டாலும், ஒரு நேரடித் தலையீடாகவும், அனைத்துலக தரநிலைகளின்படி முறையற்ற செல்வாக்காகவும் அமைகின்றது.

நிலுவையில் உள்ள நீதித்துறை நடவடிக்கைகளைப் பாதிக்கக்கூடிய கருத்துகளை நிர்வாகம் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அனைத்துலக சட்டவியல் மற்றும் ஐ.நா. தரநிலைகள், மறைமுகமான அல்லது அடையாளப்பூர்வமான தலையீடு கூட பொது நம்பிக்கையைக் குலைக்கும் பட்சத்தில் அது ஒரு மீறலாக அமையக்கூடும் என்பதைத் தொடர்ந்து உறுதிப்படுத்துகின்றன.” – என்றும் மேற்படி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

34 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

70 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

67 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

66 0 0