வெளிநாடுகளில் பதுங்கியுள்ளவர்களுக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்படும் – ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை.!
மஹரக பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றச்சாட்டுக்கு உள்ளான ராஜபக்ஷ குடும்ப உறுப்பினரை நாட்டுக்கு கொண்டு வர சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டுக்கால சம்பவங்கள் மற்றும் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை காலத்தின் போக்கில் மறக்கடிக்க இடமளிக்க முடியாது என அவர் வலியுறுத்தினார்.முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் குறுகிய காலத்தில் பெற்ற சொத்து விபரங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும், இல்லையேல் அந்த சொத்துகள் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் அரசுடமையாக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டு நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய பின்னணியில் தற்போதைய அரசாங்கமே நாட்டை பொறுப்பேற்றதாகவும், அந்த சூழலில் பொருளாதார மீட்சி குறித்து எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகளின் ஒன்றுகூடல்கள் அரசாங்கத்திற்கு சவாலாக அமையாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
அத்துடன் நிலக்கரி கொள்வனவு தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கையின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், எந்தவொரு தரப்பையும் பாதுகாக்க தமக்கு தேவையில்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.