சர்வதேச தொழிலாளர் தினம் இன்று.
சர்வதேச தொழிலாளர் தினம் மே 1 ஆம் திகதி வருகிறது.
வளர்ச்சியடைந்த நாடுகளில் 24 மணிநேரத்தில் 12 முதல் 18 மணித்தியாலங்கள் வரை வேலை செய்ய வேண்டுமென தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
1886 ஆம் ஆண்டு மே மாதத்தில் சிகாகோவின் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் 8 மணி நேர வேலை, எட்டு மணி நேர தூக்கம், எட்டு மணி நேர ஓய்வு ஆகிய கோரிக்கையை முன்வைத்து மக்கள் போராட்டத்தை நடத்தினர். இதன்போது, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த அலை உலகெங்கும் பரவி, 1889 ஆம் ஆண்டு பெரிஸில் நடந்த சர்வதேச சோசலிச மாநாட்டில் மே 1ஆம் திகதி சர்வதேச தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
இலங்கையின் மே தின வரலாற்றில் ஏ.ஈ. குணசிங்கவின் பங்கு மிக முக்கியம் இடம் வகிக்கின்றது. இலங்கை தொழிற்சங்க இயக்கத்தின் தந்தை என அறியப்படும் இவர், 1927ஆம் ஆண்டில் இலங்கையில் முதன்முதலாக மே தினத்தைக் கொண்டாடினார்.
1956-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மே 1-ஆம் திகதியை அரச விடுமுறை தினமாக அறிவித்தார்.
இது தொழிலாளர் உரிமைகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.
இலங்கையின் மே தின வரலாற்றில் மறக்க முடியாத ஒரு கறுப்பு நாளாக 1993 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி அமைந்தது.
அன்றையதினம் கொழும்பு ஆமர்மர் வீதி சந்தியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினப் பேரணியில், அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ஒரு நாட்டின் தலைவரே மே தின ஊர்வலத்தில் கொல்லப்பட்டமை உலக மே தின வரலாற்றிலேயே ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வாகும்.
இந்த நாளானது உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையையும், மனித மாண்பையும் பறைசாற்றும் ஒரு வரலாற்றுச் சாசனமாகும்.
முதலாளித்துவ வர்க்கத்தின் அடக்குமுறைகளை அடக்குவதற்கு உழைப்பாளர்கள் அன்று வீதியில் இறங்கினார்கள். உயிர்த் தியாகமும் செய்தார்கள் அவர்களை நினைவுகூறும் அதேவேளை அவர்கள் வென்றெடுத்த உரிமைகளை தொடர்ந்தும் பாதுகாத்து முன்னொக்கி செல்ல வேண்டும் என்பதே இந்த நாள் உணர்த்தும் முக்கிய செய்தியாக அமைந்துள்ளது.