திருச்சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரைக் கொண்டாட்டம்!
முறிகண்டி தென்னிந்திய திருச்சபையினால் நடாத்தப்பட்டு வரும் சிறுவர் அபிவிருத்தித் திட்டத்தின் சித்திரைக் கொண்டாட்ட நிகழ்வு இன்று ஏப்ரல் 17 ஆம் திகதி திருச்சபை வளாகத்தில் நடைபெற்றது.
திட்ட இயக்குனர் வண எஸ் குகனேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் பிரதம அதிதியாகவும், இந்துபுரம் கிராம அலுவலர் T கௌசிகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து சிறுவர்கள் மற்றும் பெற்றோரின் கலைநிகழ்வுகள் நடைபெற்றது. தொடர்ந்து கலாசார விளையாட்டுக்களாக யானைக்கு கண் வைத்தல், முட்டி உடைத்தல் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற்று பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அழிந்துவரும் தமிழர் கலாசார பண்புகளான கூட்டாக இணைந்து பலகாரங்கள் தயாரித்தலை மீள் ஊக்குவிக்கும் நோக்குடன் குழுக்களாக இணைந்து பலகாரம் தயாரித்தல் மற்றும் குழந்தைகளிற்கு கூட்டுறவை அறிமுகம் செய்யும் நோக்குடன் பலகாரம் தயாரிக்கும் நிகழ்வும், ஒருபிடி பொங்கல் நிகழ்வும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அத்துடன், குடும்பமாக அமர்ந்து பட்டம் கட்டுதல் மற்றும் கலாசார விளையாட்டுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இதன்போது வெற்றியீட்டிய மற்றம் கலந்து கொண்ட சிறுவர்களிற்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் கலந்து கொண்ட கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் கருத்து தெரிவிக்கையில், நான் இந்த நிகழ்விற்கு வருகை தரும்போது மேற்கத்தேய நிகழ்வாக இருக்கும் என்று நினைத்தே வருகை தந்திருந்தேன். ஆனால் முற்றிலும் மாறாக இது தமிழரின் கலாசார நிகழ்வாகவே பார்க்கிறேன்.
தமிழர் வரலாற்றில் மதபேதங்கள் இருந்தது இல்லை. அனைத்து மதத்தவர்களும் ஒற்றுமையாகவே இருந்தார்கள் என்பது வரலாறு. சைவ ஆகமங்களை பிரசங்கித்து வந்த வேதாகமத்தை தமிழில் மொழிபெயர்த்தார். இவ்வாறு மதங்களிற்கு இடையில் ஒற்றுமையான வரலாறுகளே எமக்கு உண்டு.
அந்த வகையில், இந்த சிறுவர் அபிவிருத்தித் திட்டத்தினால் இவ்வாறான தமிழர் கலாசார நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தமை பாராட்டுக்குரியது. அதிலும் குறிப்பாக சிறுவர்களிற்கு இவ்வாறான கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தமை எதிர்காலத்தில் நல்லதொரு சமூகத்தை கட்டி எழுப்ப முடியும்.
சிறுவர்களிற்கு இவ்வாறான நிகழ்வுகள் மூலம் ஆரம்ப காலத்திலேயே பல்வேறு விடயங்களை கற்றுக் கொடுக்க முடியும். அது எதிர்காலத்தில் அவர்களை நல்ல பிரசைகளாக உருவாக்க முடியும். இவ்வாறான நிகழ்வுகளை தொடர்ந்தும் ஏற்பாடு செய்து கலாசாரத்தையும், இன மத நல்லிணக்கத்தையும் வளர்க்க வேண்டும் எனவும், ஏற்பாடு செய்திருந்த திட்டக் குழுவினருக்கு வாழ்த்துக்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்வில் கலந்து கொண்ட கிராமசேலையாளர் T கௌசிகன் தெரிவிக்கையில், இந்த திட்டத்தின் மூலம் அனைத்து இன மதங்களை மதிக்கின்ற, சமமாக பார்க்கின்ற நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றமையை நான் பார்க்கின்றேன். இது எதிர்காலத்தில் எமது சமூகத்திற்கு நல்ல முன்னேற்றத்தை கொண்டு வரும்.
இனிவரும் காலங்களில், சமூகத்தில் உள்ள சிறார்களையும் உள்ளடக்கி இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

