பேருந்து கட்டணம் அதிகம் அறவிடப்பட்டால் உடனே அறிவிக்கவும்! போக்குவரத்து ஆணைக்குழு
நியமிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக பேருந்து கட்டணம் அறவிடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போக்குவரத்து ஆணைக்குழுவின் செயற்பாட்டு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனை கருத்தில் கொண்டு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மக்கள் அனைவரிடமும் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
நியமிக்கப்பட்ட கட்டணத்தை மீறி அதிக கட்டணம் அறவிடும் பேருந்துகள் குறித்து உடனடியாக 1955 என்ற இலக்கத்துக்கு முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முறையான அனுமதிப்பத்திரமின்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் இத்தகைய சட்டவிரோத கட்டண அறவீடுகள் அதிகம் இடம்பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அனுமதிப்பத்திரம் இன்றி கொழும்பிலிருந்து பயணத்தை ஆரம்பிக்க முயன்ற 7 பேருந்துகள் நேற்று சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, அதிக கட்டண அறவீடுகள் இடம்பெற்றால் உடனடியாக முறைப்பாடு செய்ய வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.