நிலக்கரி கொள்வனவில் 30 பில்லியன் ரூபாய் ஊழல்; நாட்டின் வரலாற்றில் திட்டமிட்ட கொள்ளை.!
இலங்கையின் நிலக்கரி கொள்வனவு நடைமுறைகளில் பாரிய முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“நிலக்கரி கொள்வனவின் போது இடம்பெற்ற ஊழல் மோசடிகள் காரணமாக நாட்டுக்கு சுமார் 30 பில்லியன் ரூபாவுக்கும் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளது. இது நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற ஒரு மிகப்பாரிய திட்டமிட்ட கொள்ளையாகவே கருதப்பட வேண்டும். விநியோகஸ்தர்கள் முறையாகப் பதிவு செய்யப்படுவதற்கு முன்னரே அவர்களுக்கு ஏல ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கணக்காய்வாளர் நாயகத்தின் ஆலோசனைகளை மீறி, 42 நாட்களாக இருந்த விலைமனுக் கோரல் காலம் 21 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறிப்பிட்ட சில ஊழல் நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயற்படும் வகையில், நிலக்கரியின் கலோரி அளவு தரநிலைகள் வேண்டுமென்றே திருத்தப்பட்டுள்ளன. சட்டமா அதிபரின் இறுதி இணக்கம் கிடைப்பதற்கு முன்னரே இந்த விலைமனுக்கள் வழங்கப்பட்டுள்ளமை பாரிய விதிமீறலாகும்.
தற்போதைய மற்றும் முன்னாள் அரசுகளின் முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த ஊழல் பின்னணியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்டுள்ளனர். தமது நெருக்கமானவர்களைப் பாதுகாப்பதற்காகவே இவ்வாறான முறைகேடுகளுக்கு அவர்கள் வழிவகுத்துள்ளனர்.
நிலக்கரி தாங்கிய கப்பல்கள் வருகை தருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நாட்டின் மின்சார உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதன் விளைவாக பாரிய பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரச அதிகாரிகளின் முறையற்ற தலையீடுகளினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பாதிப்பு குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.” – என்றார்.