வடமராட்சி கிழக்கில் 300 ஏக்கர் காணி அபகரிப்பு; மக்கள் மீண்டும் எதிர்ப்பு..!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணற்காடு குடத்தனை வடக்கு, பொற்பதி குடத்தனை கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளில் தனியார் ஒருவருக்கு கொல்வ் விளையாட்டுக்களுடன் கூடிய சுற்றுலா, பொழுதுபோக்கு மையங்கள் அமைப்பதற்காக 300 ஏக்கர் காணியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் 10/4/2026 இன்றைய தினம் குறித்த தனியார் மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் தலைமையில் மணல்காடு, குடத்தனை வடக்கு, பொற்பதி கிராம மக்களுடனான கலந்துரையாடல் பொற்பதியில் இடம்பெற்றது.
இதில் குறித்த தனியார் நிறுவனத்தால் மக்களிடம் காணியை பெற்றுக்கொள்வதற்காக விருப்பம் கோரியபோது குறித்த பிரதேச மக்கள் தமது கிராம சூழலில் காணிகளை வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு இவர்கள் இது சம்மந்தப்பட்ட கலந்துரையாடலை பல தடவை மேற்கொண்டு உள்ளதாகவும் கிராம மக்கள் தமது கருத்துக்களை முன்வைத்த போதும் அவர்கள் மீண்டும் மீண்டும் முன் வருவது வருத்தத்துக்குரிய விடயம் என கிராம மக்களால் சுட்டிக்காட்டப்படும் போது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் குறித்த தனியார் நிறுவனம் கிராம மக்களுக்கு கலந்துரையாடல் செய்வது தனக்கு அறிவிக்க வில்லை என மக்கள் முன் பகிரங்கமாக அறிவித்தார்.
பின்னர் கிராம மக்களிடம் பிரதேச செயலாளர் காணி கொடுக்க மறுப்பதற்கான காரணத்தை வினாவிய போது கிராம மக்கள் தமது அன்றாட தேவைக்கே தமது கிராமத்தில் நிலப்பரப்பு குறைவாக உள்ளது எனவும் புதிதாக திருமணம் செய்து வரும் குடும்பங்களுக்கு இதுவரை இருப்பதற்கு காணி கொடுக்கவில்லை எனவும் என பல காரணங்கள் முன்வைக்கப்பட்டது.
பின்னர் குறித்த கிராம உத்தியோகத்தர்களிடமிருந்து பிரதேச செயலாளர் காணிகள் இல்லாத குடும்பங்களின் விபரங்கள் மற்றும் எண்ணிக்கையினை அறிக்கையிட்டு அவர்களுக்கு காணி வழங்குவதற்கான வேலைத்திட்டம் மிக விரைவில் நடைபெறும் என கூறியுள்ளார்.


