நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; சிறுவன் உட்பட மூவர் உயிரிழப்பு.!
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று (09) வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்துக்களில் சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பலாந்தோட்டை – போலான, கொக்கல்ல வீதியின் ஒயிலான சந்திக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் 15 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
போலான பகுதியில் இருந்து கொக்கல்ல நோக்கிச் சென்ற உந்துருளி வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த உந்துருளி ஓட்டுநரும் பின்னால் அமர்ந்து சென்ற சிறுவனும் பெரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, குறித்த சிறுவன் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மினுவாங்கொடை – கட்டுநாயக்க வீதி பகுதியில் வியாழக்கிழமை காலை வேன் ஒன்றில் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மினுவாங்கொடை நோக்கி பயணித்த வேன் ஒன்று, வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த பாதசாரி மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், ஹொரண – குருகொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாதுக்கை பகுதியில் இருந்து குருகொட நோக்கி பயணித்த உந்துருளி, அதே திசையில் முன்னால் சென்ற முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த உந்துருளி ஓட்டுநரும் முச்சக்கர வண்டி ஓட்டுநரும் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த தம்பர பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.