நிலக்கரி மோசடி: அமைச்சரவை முழுவதும் சிறைக்கு செல்லும் அபாயம் – சானக எச்சரிக்கை.!
ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று ஊழல்வாதிகளைப் பாதுகாத்து வருகின்றனர் என்றும், நிலக்கரி கொள்வனவு மோசடி காரணமாக எதிர்காலத்தில் முழு அமைச்சரவைக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் டி.வி. சானக தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
தரம் குறைந்த நிலக்கரி விதிமுறைகளை மீறி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய நிறுவனத்திற்கு முறைகேடாக விலைமனு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த தரமற்ற நிலக்கரியால் மின்சார உற்பத்தியில் பாரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அமைச்சர்கள் தவறுகளை அறிந்தே செய்கிறார்களாஅல்லது அறியாமல் செய்கிறார்களா என்பது தெளிவில்லை என்றும், எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டிய பிழைகளை மறைமுகமாகச் சரிசெய்து வெளியில் விமர்சனம் செய்வதாகவும் அவர் கூறினார்.
முறையற்ற கொள்வனவுகள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பில் எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், தற்போதைய நிர்வாகத்தின் செயல்பாடுகள் காரணமாக அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும் என்றும் சானக எச்சரித்தார்.