வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது.!
சுமார் 72 இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சீனப் பிரஜை ஒருவர் இன்று வியாழக்கிழமை (02) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் சீனாவை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான MH-179 என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை 12.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள Green Channel ஊடாக வெளியேற முயன்ற போதே, அங்கு கடமையிலிருந்த சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதன்போது, அவர் கொண்டு வந்த 04 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 240 கார்ட்டூன் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 07 வெவ்வேறு வகையான சுமார் 48,000 சிகரெட்டுகள் காணப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.