ஹட்டன் நகரில் கடும் நீர் தட்டுப்பாடு: நகர சபை மீது குற்றச்சாட்டு.!
கடுமையான வெப்பமான காலநிலையால் ஹட்டன் நகரில் கடும் நீர் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்கே மக்கள் ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னரும் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தாலும், இம்முறை நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டில் அதிக மழை பெய்திருந்த போதிலும், பின்னர் ஏற்பட்ட வறட்சியால் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.அதேவேளை, நகர சபையின் நிர்வாக குறைபாடுகளும் தற்போதைய நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சில தனியார் நிறுவனங்களுக்கு நீர் விநியோகம் செய்யப்பட்டாலும், சிறுவர்கள், கர்ப்பிணிகள், முதியோர் உள்ளிட்ட பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்படுகிறது.
நகர சபையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை எனக் குறிப்பிட்டு, முன்னாள் நகர பிதாவும் தற்போதைய உறுப்பினருமான அழகுமுத்து நந்தகுமார் அண்மையில் சபை அமர்விலிருந்து வெளியேறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.நீர் விநியோகம் மற்றும் கழிவு மேலாண்மை தொடர்பாக நகர சபை அசட்டுத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், சரியான நிர்வாகம் மற்றும் திட்டமிடல் இருந்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், ஹட்டன் நகரில் பொதுக் கழிவறைகளில் கூட நீர் வசதி இல்லாத நிலையிலும், பயன்படுத்துவதற்கு 40 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவது அநியாயம் என மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.