இலங்கையில் மேலும் தீவிரமடையும் வெப்பம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை.!
இலங்கையில் நிலவி வரும் கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை எதிர்வரும் வாரங்களில் மேலும் தீவிரமடையக்கூடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இதனைத் தெரிவித்தார். சூரியன் நேரடியாக உச்சம் கொடுப்பதாலும், உலகளாவிய காலநிலை மாற்றங்களினாலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் உச்சத்தை எட்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேவையற்ற வெளிச்செல்லலை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பத்தைத் தடுக்க இளநிற ஆடைகள் அணிதல், குடை அல்லது தொப்பி பயன்படுத்தல், அதிகளவு நீர் அருந்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள், குறிப்பாக வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடும்வர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதால் மயக்கம், வாந்தி அல்லது உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டால் உடனடி மருத்துவ உதவி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடியதால், அவர்களுக்கான பராமரிப்பில் குடும்பத்தினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சில மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம்தெரிவித்துள்ளது.