பயணப் பொதிக்குள் காத்திருந்த அதிர்ச்சி; கட்டுநாயக்கவில் விலங்குகளுடன் சிக்கிய இலங்கையர்.!
சுமார் 9 இலட்சத்து 98 ஆயிரம் ரூபா பெறுமதியான 38 செல்லப்பிராணிகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் இன்று அதிகாலை (26.03.2026) கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார்.தாய்லாந்தின் பேங்காக் நகரில் இருந்து தாய் ஏர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான TG-307 விமானம் மூலம் இன்று அதிகாலை 12.01 மணியளவில் அவர் கட்டுநாயக்கவை வந்தடைந்தார்.
சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து முன்னெடுத்த சோதனையின் போது, பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 38 விலங்குகள் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட விலங்குகளில் கினிப் பன்றிகள், அணில் வகைகள், சுகர் கிளைடர்கள், புறாக்கள் மற்றும் முள்ளம்பன்றிகள் அடங்கியுள்ளன என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் கண்டி, திகனை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டது.
சுங்க அதிகாரிகள் விசாரணையின் போது, சந்தேகநபருக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட செல்லப்பிராணிகளை மீண்டும் தாய்லாந்தின் பேங்காக் நகருக்கே திருப்பி அனுப்ப தீர்மானிக்கப்பட்டு, அவற்றை தாய் ஏர்வேஸ் விமான நிறுவனத்திற்கு ஒப்படுத்தியுள்ளனர்.