கிளாஸ்கோவில் உள்ள குயின் எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனை மீண்டும் சர்ச்சையில்!
கிளாஸ்கோ நகரில் அமைந்துள்ள பிரிட்டனின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான குயின் எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனை மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் அசுத்தமான நீர் மற்றும் பூஞ்சை பரவல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அங்கு சிகிச்சை பெற்ற சில நோயாளிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக தேசிய சுகாதார சேவை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். சம்பவம் குறித்து சில நோயாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். எனினும், எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர், ஏற்பட்ட பாதிப்புகள் என்ன, உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து அதிகாரிகள் தகவல் வெளியிட மறுத்துள்ளனர்.
சுமார் ஒரு பில்லியன் பவுண்ட் செலவில் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை, தொடக்கத்திலிருந்தே பல கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் மாசுபட்ட நீர் மற்றும் காற்றோட்டப் பிரச்சினைகள் காரணமாக சில நோயாளிகள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மருத்துவமனை சூழல் காரணமாக ஏற்பட்டதாகக் கூறப்படும் மரணங்கள் தொடர்பில் நிறுவன ரீதியிலான கொலை விசாரணையும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையில், அண்மையில் மருத்துவமனையில் புதிய சுற்றுச்சூழல் அபாயங்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகிய சில நாட்களிலேயே அசுத்த நீர் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மக்களின் உயிரைக் காக்க வேண்டிய மருத்துவமனையே சுகாதாரமற்ற சூழலால் நோயாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.இந்த விடயத்தில் முழுமையானவெளிப்படைத்தன்மை அவசியம் என பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.