ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலை 2 சதவீதமாக உயர்வு!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதலால் எண்ணெய் விநியோகம் குறையக்கூடும் என்ற தொடர்ச்சியான அச்சத்தின் காரணமாக வியாழக்கிழமை ஆரம்ப ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலைகள் சுமார் இரண்டு சதவீதம் உயர்ந்துள்ளன.
புதன்கிழமை ஒரு பீப்பாய்க்கு 74.66 அமெரிக்க டொலராக இருந்த மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் விலை, கிரீன்விச் சராசரி நேரப்படி இரவு 11.10 மணியளவில் 1.86 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 76.05 அமெரிக்க டொலராக பதிவானது.
முந்தைய நாள் ஒரு பீப்பாய்க்கு 81.40 அமெரிக்க டொலராக நிலையாக முடிவடைந்த பிரெண்ட் வட கடல் மசகு எண்ணெய் விலை, வியாழக்கிழமை காலை நிலவரப்படி இன்னும் வர்த்தகத்தில் பதிவாகவில்லை.சனிக்கிழமை தொடங்கிய ஈரானுடன் தொடர்புடைய அமெரிக்கா – இஸ்ரேல் மோதலின் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகின் கடல்வழி மசகு எண்ணெய் போக்குவரத்தின் ஐந்தில் ஒரு பகுதி இந்த நீரிணை வழியாக நடைபெறுகின்றது. அதேபோல் கணிசமான அளவு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவும் இந்தப் பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.
எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தை தணிக்கும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க கடற்படை எண்ணெய் கப்பல்களை பாதுகாப்புடன் வழியனுப்ப தயாராக இருப்பதாகவும், கப்பல் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஓமான் கடற்படையினர் மொல்டா கொடியுடன் பயணித்தகொள்கலன் கப்பலில் இருந்த 24 பணியாளர்களை மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஹார்முஸ் நீரிணையை கடக்கும்போது ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளான நிலையில் அவர்கள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எமிரேட்ஸ் மற்றும் ஓமான் கடற்கரைப் பகுதிகளுக்கு அருகில் மூன்று கப்பல்களுக்கு எதிராக ஏவுகணைகள் தாக்கிய அல்லது அருகில் விழுந்த சம்பவங்களுக்குப் பின்னர், 24 மணி நேரத்திற்குள் பதிவான நான்காவது தாக்குதல் இதுவாகும்.இந்நிலையில், முக்கியமான இந்த நீர்வழிப் பாதையின் மீது முழுமையான கட்டுப்பாடு தமக்குள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது.