அமெரிக்கப் படகு மீது துப்பாக்கிச் சூடு.!
கியூபா நாட்டின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் அமெரிக்கா பதிவு செய்யப்பட்ட அதிவேகப் படகின் மீது கியூபா பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.இந்தச் சம்பவத்தால் இரு நாடுகளுக்கிடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
கியூபாவின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள காயோ பால்கோன்ஸ் தீவு அருகே நேற்று காலை இந்த மோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புளோரிடாவில் பதிவு செய்யப்பட்ட அதிவேகப் படகு ஒன்று கியூபா கடல் எல்லைக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து, எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதனை இடைமறிக்க முயன்றுள்ளனர்.
கியூபா உள்நாட்டு விவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையின்படி, பாதுகாப்புப் படையினர் படகை நெருங்கியபோது அதிலிருந்தவர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்பட்டுள்ளது. இதில் கியூபா கட்டளை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதற்கு பதிலடியாக பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில், அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழந்தனர்.
மேலும் ஆறு பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவத்தை ‘படுகொலை’ எனக் குறிப்பிட்டுள்ள புளோரிடா காங்கிரஸ் உறுப்பினர் கார்லோஸ் கிமெனெஸ், முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களில் அமெரிக்கப் பிரஜைகள் உள்ளனரா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டகாரணங்களால் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே அரசியல் பதற்றம் நிலவி வரும் நிலையில், தமது கடல் எல்லையும் இறையாண்மையும் பாதுகாக்கப்படும் என கியூபா அரசு தெரிவித்துள்ளது.