உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

ஆவணங்கள் இல்லை எனக் காரணம் காட்டி மக்களின் காணிகளை முடக்கவே முடியாது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

மக்களின் பூர்வீக வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதார நிலங்களுக்கு முறையான ஆவணங்கள் இல்லை என்பதைக் காரணம் காட்டி, அக்காணிகளை விடுவிக்க வனவளத் திணைக்களம் மறுப்புத் தெரிவிப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மாவட்ட செயலகங்களினால் பரிந்துரைக்கப்படும் மக்கள் காணிகளை வனவளத் திணைக்களம் எவ்வித தடையுமின்றி முழுமையாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், குழுவின் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான இ.சந்திரசேகர் மற்றும் குழுவின் இணைத் தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் நேற்று புதன்கிழமை காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத் திறன் அபிவிருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்தின் ஆரம்பத்தில் வரவேற்புரையாற்றிய கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சு.முரளிதரன், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் மணல் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள துரித நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார். கல்மடுக் குளத்திலிருந்து பெறப்பட்டுச் சுத்திகரிக்கப்பட்ட மணல், தற்போது கரைச்சிப் பிரதேச சபையின் ஊடாக மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

மேலும், கடந்த ‘டித்வா’ பேரிடரின் பின்னர் இரணைமடுக் குளத்தின் மேலதிக நீர் வெளியேறிய ஆற்றுப் பகுதிகள், அக்கராயன் மற்றும் கல்லாறு ஆகிய ஆற்றுப் பகுதிகளில் குவிந்துள்ள மணலை பிரதேச சபைகள் ஊடாகச் சேகரித்து மக்களுக்கு விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கிளிநொச்சியிலுள்ள 5 குளங்களில் மண்ணைக் கழுவுவதற்கான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் சுமார் 15,000 கியூப் மணல் பெற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதனூடாக இரு மாவட்டங்களினதும் எதிர்கால மணல் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் இ.சந்திரசேகர், நடப்பு ஆண்டில் மாவட்டத்தின் அபிவிருத்திக்காகப் பல்வேறு நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறவுள்ள நிலையில், அவற்றை வினைத்திறனுடன் செலவிடுவதற்கான போதிய கால அவகாசம் காணப்படுவதால், அபிவிருத்திப் பணிகளை மிகச் சிறப்பாகவும் துரிதமாகவும் முன்னெடுக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்கான பல்வேறு விடயங்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன. பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதி, மீள்குடியேற்ற அமைச்சின் ஊடான வீட்டுத் திட்டங்கள், கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள், புனரமைக்கப்பட வேண்டிய பாலங்களின் முன்னுரிமைப் பட்டியல், இடர் முகாமைத்துவத் திட்டம் மற்றும் சமூக சக்தி வறுமை ஒழிப்புத் திட்டம் ஆகியவற்றுக்கான அனுமதிகள் கோரப்பட்டபோது, கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனா, பொ.கஜேந்திரகுமார் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ஆகியோர் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். அதேவேளை, வன்னேரிக்குளம் சுற்றுலா அபிவிருத்தி, கௌதாரிமுனையில் காணி வழங்கல் மற்றும் பொருளாதார மத்திய நிலையக் கடைகள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களுக்குக் குழுவினால் அனுமதி வழங்கி வைக்கப்பட்டது.

வனவளத் திணைக்களத்திடமிருந்து 10 ஆயிரத்து 821 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், வெறுமனே 1,088 ஏக்கர் காணியை மாத்திரமே விடுவிக்க வனவளத் திணைக்களம் பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பில் சுட்டிக்காட்டிய மாவட்ட செயலாளர், கோரப்பட்ட முழுமையான 10 ஆயிரத்து 821 ஏக்கர் காணியையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், அக்கோரிக்கைக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஏகமனதாக அனுமதி வழங்கியது. வனவளத் திணைக்களத்தால் விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பான முழுமையான விவரங்களை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியைப் பெற்றுச் சமர்ப்பிக்குமாறு அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் இதன்போது குறிப்பிட்டார்.

அதேபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தின் எதிர்காலக் குடிதண்ணீர் தேவையைக் கருத்தில்கொண்டு, இரணைமடுக் குளத்திலிருந்து குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதியும் ஒருங்கிணைப்புக் குழுவால் வழங்கப்பட்டது.

அத்துடன், கிளிநொச்சி நகர்ப்புறக் குளங்களின் ஒதுக்கீட்டுக் காணிகளை ஆக்கிரமித்துள்ளவர்களைச் சட்டபூர்வமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவை இரண்டாகப் பிரிப்பதற்கும், சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைப் பிரித்து மீளமைப்பதற்கும் ஒருங்கிணைப்புக் குழு அனுமதி வழங்கியது.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சட்டவிரோத கடலட்டைப் பண்ணைகளை ஒழுங்குபடுத்துவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அர்ச்சுனா இராமநாதன் ஆகியோரும், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச சபைகளின் கௌரவ தவிசாளர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0