பிரான்சின் மது உற்பத்தித் துறைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவி.!
ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ் நாட்டின் மது உற்பத்தித் துறைக்கு ஆதரவாக 40 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்க தீர்மானித்துள்ளது.
விவசாய ஆணையர் கிரிஸ்தோஃப் ஹான்சன், விவசாயக் கண்காட்சியை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதிக உற்பத்தி காரணமாக சந்தையில் தேங்கியுள்ள மதுவை தொழில்துறை பயன்பாட்டிற்கான மதுவாக மாற்றும் அவசர ஆவியாக்கத் திட்டத்திற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும். இதன் மூலம் சந்தை விலைகள் நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நைட்ரஜன் உரங்களின் இறக்குமதி சுங்க வரிகளை ஒரு ஆண்டுக்காலத்திற்கு இடைநிறுத்தவும் ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. ஆனால் ரஷ்யா மற்றும் பெலாறஸ் ஆகிய நாடுகளிலிருந்து வரும் இறக்குமதிகள் இந்த சலுகையில் சேர்க்கப்படமாட்டாது. உற்பத்திச்செலவுகள் உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள தானிய மற்றும் பிற பயிர் விவசாயிகளுக்கு இது நிவாரணமாக அமையும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மெர்கோசூர் உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கும் விவசாய ஆணையர் ஆதரவு தெரிவித்துள்ளார். உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க முடியாத சூழலில், ஐரோப்பிய விவசாய ஏற்றுமதிக்கான புதிய சந்தைகளைத் தேடுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
இந்த ஒப்பந்தத்தை தற்காலிகமாக அமுல்படுத்துவது குறித்து உறுப்புநாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம் உடன் ஆலோசித்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.