வடகிழக்கு அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 153 ஆண்டுகளில் முதன்முறையாக செய்தித்தாள் அச்சிடுதல் நிறுத்தம்.!
அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக வீசி வரும் கடும் பனிப்புயலின் காரணமாக, பல இடங்களில் மூன்று அடி உயரம் வரை பனி குவிந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக நியூஜெர்சி மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அவசர சேவைகளைத் தவிர்ந்த அனைத்து போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால், வடகிழக்கு பகுதிகளில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.பாஸ்டன், கனெக்டிகட், மேரிலேண்ட், விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களிலும் பனிப்புயல் தாக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கடுமையான பனிப்புயலின் தாக்கத்தால்153 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக தி பாஸ்டன் குளோப் நாளிதழ் தனது தினசரி அச்சுப் பதிப்பை நிறுத்தியுள்ளது. பத்திரிகையின் அச்சகம் அமைந்துள்ள மசாசூசெட்ஸ் மாகாணத்தின் பிரிஸ்டல் பகுதியில் சுமார் இரண்டு அடி உயரத்திற்கு பனி குவிந்துள்ளதால், ஊழியர்கள் பணிக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற நாளிதழ்களில் ஒன்றான தி பாஸ்டன் குளோப், 1872 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் 153 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக அச்சு வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.